போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்ட ஷேக் ஹசீனா? வங்கதேசத்தில் பரபரப்பை கிளப்பிய ஆடியோ
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில், 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களை கண்டதும் சுட ஷேக் ஹசீனா தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டதாகவும், அது தொடர்பான ஆடியோ ஒன்றும் வங்கதேசத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டம் நடைபெற்றது. பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. நிலைமை கையை மீறி சென்றதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு தப்பினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா தற்போது வரை இந்தியாவிலே இருந்து வருகிறார். ஷேக் ஹசீனா வெளியேறியதையடுத்து, வங்க தேசத்தில் முகம்மது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்க தேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும், இதற்கு இந்திய அரசு தற்போது வரை பதிலளிக்கவில்லை. ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு போராட்டம் உச்சத்தில் இருந்த போது ஷேக் ஹசீனா பேசியதாக சொல்லப்படும் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி வங்க தேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஊடகமான பிபிசி இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளுமாறு தனது பாதுகாப்பில் இருந்த படையினருக்கு தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரக மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், 1,400 பேர் வரை கொல்லப்பட்டனர். வங்கதேசத்தை உலுக்கிய இந்த போராட்டத்தின் போதுதான், ஷேக் ஹசீனா சுட்டுத்தள்ள உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பாதுகாப்பு படையினருக்கு ஷேக் ஹசீனா போன் மூலமாக உத்தரவிட்டதாகவும் அதில் எந்த ஆயுதத்தை வேண்டும் என்றாலும் பயன்படுத்துங்கள்.. அவர்களை எங்கு கண்டாலும் சுட்டுத்தள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
ஷேக் ஹசீனா இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில் வங்கதேச துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் மற்றும் இதையடுத்து ஏற்பட்ட வன்முறை, உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுதந்திரமான விசாரணை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications