ஒரே நாளில் திணறடித்த 11 லட்சம் மின்னல்.. புரியாமல் குழம்பிய ஆய்வாளர்கள்! எங்கு தெரியுமா
கான்பரா: பொதுவாக மழை பெய்யும் போது மின்னல் அடிப்பது இயல்புதான். மழை பெய்யும் போது அதிகபட்சம் சில முறை இடி இடிக்கும். ஆனால், இங்கு ஒரே நாளில் சுமார் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளது. அது எந்த இடம்.. இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
மழைக் காலங்களில் நாம் பொதுவாக அஞ்சுவது என்னவோ மின்னலை பார்த்துத் தான்.. ஏனென்றால் நொடிப் பொழுதில் தாக்கும் மின்னலால் உயிரிழப்புகளும் கூட ஏற்படும்.

மின்னல்: சில நொடி மட்டுமே நீடிக்கும் மின்னல் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். இதன் காரணமாக மின்னல் அடித்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆனால், எல்லா நேரங்களிலும் மின்னல் தாக்காது. மின்னல் ஏற்படச் சரியான சூழல் அமைய வேண்டும் என்பதால் பொதுவாக ஒரு நாளைக்கு சில முறை மட்டுமே மின்னல் தாக்கும்.
11 லட்சம் மின்னல்: ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவை சுமார் 11 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளன. உலகில் வேறு எங்கும் ஒரே நாளில் இத்தனை முறை மின்னல் தாக்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், அப்போது தான் இந்தளவுக்கு மின்னல் சரமாரியாகத் தாக்கியுள்ளன.
எங்கே அதிகம்: இந்த புயல்களின் போது, வானத்தை முழுக்க முழுக்க மின்னல்கள் ஆக்கிரமித்துள்ளன. குறுகிய நேரத்தில் இந்தளவுக்கு மின்னல் தாக்கியது வல்லுநர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. குறிப்பாக உளுருவில் என்ற பகுதியில் மட்டும் 7.19 லட்சம் முறை மின்னல் தாக்கியுள்ளன. 800 கிலோமீட்டர் சுற்றளவில் இத்தனை மின்னல்கள் ஏற்பட்டுள்ளன..
அதேபோல தென்கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியிலும் கடுமையான மழை பெய்த நிலையில், அங்கு 3.28 லட்சம் முறை ஒரே நாளில் மின்னல்கள் தாக்கியுள்ளன. மேலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 95,000 மின்னல் தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த பகுதியில் மின்னல்கள் அடிக்கடி ஏற்படாதாம். இதனால் ஞாயிற்றுக்கிழமை திடீரென இந்தளவுக்கு மின்னல் ஏற்பட்டது எப்படி என்று ஆய்வாளர்களே கூட குழம்பிப் போய் உள்ளனர்.
எச்சரிக்கை: இது தொடர்பாக அந்நாட்டின் வல்லுநர்கள் கூறுகையில், "பொதுவாக மத்திய ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா என்பது வறண்ட பகுதிகள். இந்த பகுதியில் புயல் மற்றும் மின்னல் குறைவாகவே இருக்கும். ஆனால், இப்போது நேர்மாறான ஒரு நிகழ்வு அங்கு நடந்துள்ளது.. மத்திய ஆஸ்திரேலியா பகுதியில் ஏற்பட்ட ஒரு புயலும், கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புயலும் ஒரே இடத்தில் சந்தித்ததே இதற்குக் காரணமாகும்" என்கிறார்கள்.

குயின்ஸ்லாந்து பகுதியிலும் மழை கொட்டி வருகிறது. அங்கு வரும் நாட்களிலும் இதேபோன்ற நிலைமையே தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆபத்தான பகுதிகளில் வசித்து வந்த பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வெப்பம் அதீதமாக இருக்கும் இந்த பகுதிகளில் திடீரென இந்தளவுக்கு இடி, மின்னல் தாக்கியது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications