எஸ்சிஓ மாநாட்டில் இந்தியா எங்களை பழிவாங்கிவிட்டது! கதறும் அஜர்பைஜான்.. என்ன நடந்தது? பின்னணி
பீஜிங்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வந்த நாடுகளில் ஒன்று அஜெர்பைஜான். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அஜெர்பைஜான், இந்தியா மீது தற்போது அபாண்டமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறது. அதாவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு நேர உறுப்பினராக சேரும் தங்கள் நாட்டின் முயற்சியை இந்தியா, தடுத்துவிட்டதாக கூறியிருக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முழுநேர உறுப்பு நாடாக தங்களை சேர விடாமல் தடுத்து இந்தியா பழிவாங்க முயல்வதாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முழுநேர உறுப்பினராக அஜர்பைஜான் முயற்சித்ததாகவும் ஆனால், இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த முயற்சியை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தியா பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு அஜர்பைஜான் ஆதரவு அளித்ததால் இந்தியா தற்போது பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், சீனாவின் தியான் ஜின் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று கூறி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடன் சகோதரத்துவ உறவு
பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும் அஜர்பைஜான், தற்போது இந்தியா தங்களை பழிவாங்கிவிட்டதாக அபாண்டமாக கூறியுள்ளது. அஜர்பைஜான் அதிபர் அலியேவ் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அஜர்பைஜானுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா, சர்வதேச அமைப்புகளில் அஜர்பைஜானை பழிவாங்க முயற்சிக்கிறது.
ஆனால் இதையெல்லாம் அஜர்பைஜான் கருத்தில் கொள்ளப்போவதில்லை. பாகிஸ்தானுடனான சகோதரத்துவ உறவு எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை பெறுகின்றன" என்று கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் முழுநேர உறுப்புநாடாக சேரவிடாமல் தடுத்ததன் மூலம் பன்னாட்டு ராஜதந்திரக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாகவும் அஜர்பைஜான் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் என மொத்தம் 9 நாடுகள் நிரந்தர உறுப்புநாடுகளாக உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பதிலடியாக இந்தியாவின் எல்லையோர கிராமங்களை தாக்கியது.
பாகிஸ்தான் பக்கம் நின்ற அஜர்பைஜான்
இதற்கு வட்டியும் முதலுமாக இந்தியா பதிலடி கொடுத்தது. மூன்று நாட்கள் நீடித்த இந்த சண்டை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு துருக்கி பெரிய அளவில் ஆயுதங்களை அளித்து ஆதரவாக இருந்தது. அதேபோல அஜர்பைஜானும் பாகிஸ்தான் பக்கமே நின்றது.
இதன் காரணமாக அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இந்த இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் சுற்றுப் பயணம் செய்யக்கூடாது எனவும், அந்நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்றும் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications