கொத்து கொத்தாக மரணம்..பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது மீண்டும் தாக்குதல்-90 பேர் பலி- 'பலூச்' உக்கிரம்
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத் தொடரணி மீது தாங்கள் நடத்திய உக்கிரமான தாகுதலில் 90 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக பலுசிஸ்தானின் பலூச் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் ராணுவம் 5 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும் 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் 1947ல் இருந்தே தங்களை தனிநாடாக அங்கீகரிக்க கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான்- ஈரான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தானியர்கள் தாங்கள் ஒரு தனித் தேசிய இனம், தங்களுக்கு ஐநா அங்கீகரித்த சுய நிர்ணய உரிமை தகுதி உள்ளது; ஆகையால் தனிநாடு கோரிக்கையை கோருகிறோம் என்கின்றனர். ஆனால் பாகிஸ்தானோ, பலுசிஸ்தான் கோரிக்கையை நிராகரிக்கிறது.
பாகிஸ்தானின் மேலாதிக்கத்துக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தானியர்களின் பலூச் விடுதலை ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் 500 பயணிகளுடன் பாகிஸ்தான் ரயிலை கடத்திச் சென்றது பலூச் விடுதலை ராணுவம். இந்த கடத்தல் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. 200-க்கும் அதிகமாக பாகிஸ்தான் ராணுவத்தினரை கொலை செய்துவிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானின் ராணுவ வாகனத் தொடரணி மீது பலூச் விடுதலை ராணுவம் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி இருக்கிறது. ஆயிரக்கணக்கான பலூச் போராளிகள் அடங்கிய குழு பாகிஸ்தான், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக பலூச் ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் தரப்போ, பலூச் தாக்குதலை மட்டும் உறுதி செய்துள்ளது; இந்த தாக்குதலில் 5 வீரர்கள் மட்டும் உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர் என்கிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குவெட்டாவில் இருந்து தட்டான் நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. 7 பேருந்துகளில் ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அப்போது வெடிமருந்துகளுடன் வாகனத்தை ஓட்டி வந்த நபர் இந்த தாக்குதலை நடத்தினார். தீவிரவாதிகளின் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த போது, ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலுசிஸ்தான் மாகாணத்தில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications