வங்கதேசம் கண்ட்ரோலை கையில் எடுத்த ராணுவ தளபதி! போராட்டக்காரர்களுக்கு மெசேஜ்
டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றி அந்நாட்டின் ராணுவ தளபதி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.கண்ட்ரோலை கையில் எடுத்த
வங்கதேசத்தின் அரசு அமைப்பு முறையானது இந்திய அரசு அமைப்பு முறையின் சாயலை கொண்டிருக்கிறது. அரசமைப்பு மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களை இந்தியாவை பார்த்து வங்கதேசம் உருவாக்கிக்கொண்டது. அதில் இடஒதுக்கீடும் ஒன்று. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறைக்கு காரணமான பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இன்று போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லமான கணபாபனை சூறையாடியுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பிரதமர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
இதனையடுத்து தற்போது அந்நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமால் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், ஷேக் ஹசீனா வங்கதேச நாட்டை விட்டு வெளியேறியதை உறுதி செய்த அவர், அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அதேநேரம் மாணவர்கள், மக்கள் என அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய துணை நிற்போம் எனவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக மாணவர்களின் போராட்டம் குறித்து பேசிய அவர், "போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். வங்கதேச ராணுவம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார். இவரது பேச்சு போராட்டங்களின் வீரியத்தை ஓரளவு குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications