"வங்கதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்க முயற்சி.." பெண் பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய கும்பல்
டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே அங்கு இரவு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவரைச் சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று திடீரென அவரிடம் அத்துமீறிய சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அவரை சூழ்ந்த அந்த கும்பல் அவரை மிரட்டி அத்துமீறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைந்துள்ளது. இருப்பினும், அங்கு இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இதற்கிடையே வங்கதேசத்தில் மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளரிடம் அங்குள்ள மக்கள் அத்துமீறிய ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாக்குதல்: அதாவது வங்கதேசத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் முன்னி சாஹா என்ற பெண் டாக்காவில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது, "வங்கதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கவே எல்லாம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு அந்த கும்பல் இவரைச் சுற்றி வளைத்துள்ளது. "இது எனது நாடு.. நான் ஏன் அப்படிச் செய்யப் போகிறேன்" என்று அந்த பெண் பத்திரிக்கையாளர் கூறிய போதிலும், அதைக் கேட்காமல் அந்த கும்பல் அவரை தாக்க முற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு போலீசார் விரைந்த நிலையில், அதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மிகப் பெரியளவில் போராட்டம் நடந்தது. அந்நாட்டு மாணவர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தின் விளைவாகவே வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார். அந்த போராட்டத்தில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் இந்த செய்தியாளர் சாஹா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கும்பல் சுற்றி வளைத்துத் தாக்குதல்: டாக்காவின் கவ்ரான் பஜார் பகுதியில் சாஹாவை ஒரு கும்பல் சுற்றி வளைத்த நிலையில், போலீசார் அவரை மீட்டுள்ளனர். இது தொடர்பாக டாக்கா பெருநகர போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், "கொலை வழக்கில் அவரை தேடி வந்தோம். இதனால் மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அவர் அதிர்ச்சியில் இருந்தார். அவர் பெண் பத்திரிக்கையாளர் என்பதாலும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அவரை விடுவித்தோம். அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
பின்னணி: பத்திரிக்கையாளர் சாஹாவை ஒரு கும்பல் சுற்றி வளைத்துத் தாக்க முற்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ரைபிள்ஸ் கலகம் தொடர்பாக வேண்டும் என்றே மக்களைத் தவறாக வழிநடத்தியதாகவும் இதனால் 57 பேர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்தோர் சொல்வது கேட்கிறது. அதில் ஒருவர், "இந்த நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள். கொல்லப்பட்ட மாணவர்களின் ரத்த கறை உங்கள் கைகளில் இருந்து போகாது" என்று சொல்கிறார்.
இந்த நாட்டில் பிறந்துவிட்டு, இந்த நாட்டிற்கே எப்படி துரோகம் செய்ய முடிகிறது என்று மற்றொரு நபர் கேட்கிறார். அதற்கு சாஹா, "இது எனது நாடு.. இதற்கு நான் எப்படி துரோகம் செய்வேன்" என்று சொல்கிறார். இருப்பினும், அவர் சொல்வதைக் கேட்காமல் அந்த கும்பல் அவரை சுற்றி வளைக்கிறது. அதன் பின்னரே போலீசார் தலையிட்டதாகத் தெரிகிறது. அங்கு ஏற்கனவே இஸ்கான் துறவிகள் கைது செய்யப்படும் நிலையில், இந்தச் சம்பவமும் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications