இந்திய துணைத் தூதர் வீட்டின் மீது கல்வீச்சு! வன்முறையின் முழு உருவமாக மாறும்.. வங்கதேசம்!
டாக்கா: வங்கதேசத்தின் சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரின் வீடு அதிகாலை 1:30 மணியளவில் போராட்டக்காரர்களால் கற்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலால் பெரிய அளவுக்கு பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். மூத்த அதிகாரிகள் துணைத் தூதரின் பாதுகாப்புக்கு உறுதியளித்திருக்கின்றனர்.

சமீபத்தில் அந்நாட்டின் மாணவர் தலைவர் ஹாடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டக்காரர்கள்தான் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனா மற்றும் அவரது ஆட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரக்கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியிருந்தனர். மேலும் தண்டனை பெற்றவர்களை வங்கதேசத்திற்கு நாடு கடத்தி, இங்குள்ள சட்டப்படி தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க, இந்தியா தனது உளவு அமைப்புகளை பயன்படுத்துகிறது என்பது போராட்டக்காரர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. கொலையாளி இந்தியாவுக்கு தப்பி சென்றிருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இப்போதைய மாணவர் போராட்டக்காரர்களிடையே ஆழமான இந்திய எதிர்ப்பு உணர்வு நிலவி வருகிறது.
இந்த படுகொலை குறித்து வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் கூறுகையில், "மக்கள் அமைதி காக்க வேண்டும். ஹாடியின் கொலை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த அரசாங்கம் உறுதியேற்றிருக்கிறது. இந்த வன்முறைகள் பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தல்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 12ம் தேதி டாக்காவில் வைத்து ஹாடி துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு அவரது உடல் வங்கதேசம் வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹாடியின் கொலையாளிகள் பிடிபடும் வரை போராட்டங்கள் நீடிக்கும் என மாணவர் தலைவர்கள் அறிவித்துள்ளனர். கொலையாளி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.37 லட்சம் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications