திடீர் திருப்பம்! "உக்ரைனுக்காக உயிரையும் கொடுப்போம்!" களத்தில் இறங்கிய பெலாரஸ் வீரர்கள்.. பின்னணி
கீவ்: உக்ரைன் போர் 5ஆவது வாரமாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அண்டை நாட்டு வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
போர் தொடங்கியது முதலே அமைதி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே எவ்வித உடன்பாடு ஏற்படாத நிலையில், போர் இன்னும் தொடர்ந்தே வருகிறது.

பொருளாதாரத் தடைகள்
உக்ரைன் போர் தொடங்கியது முதலே புதினின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவையெல்லாம் கூட உக்ரைன் போரை நிறுத்த உதவுவதாக இல்லை.

தீவிர தாக்குதல்
உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாகத் தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. அதேநேரம் உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்யா ராணுவத்தைக் கண்டு துளியும் அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.

பெலாரஸ் வீரர்கள்
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் வெளிநாட்டு வீரர்கள் சண்டையிட்டு வருவதாகத் தொடக்கம் முதலே தகவல் வெளியாகி வருகிறது. இந்தச் சூழலில் பெலராஸ் வீரர்கள் ரஷ்யாவை எதிர்த்து போரில் சண்டையிட இன்று அதிகாரப்பூர்வமாக உக்ரைன் ராணுவத்தில் இணைந்தனர். இது தொடர்பாக தி கீவ் இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் பெலாரஸ் வீரர்கள் உறுதிமொழி எடுப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெலராஸ் சர்வாதிகாரி
பெலராஸ் நாட்டில் இப்போது சர்வாதிகாரி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் பெலாரஷ்யன் மொழி பேசுபவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெலராஸ் வீரர்கள் இப்போது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவை எதிர்த்துச் சண்டையிடுகின்றனர். பெலராஸ் ஆட்சியாளர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
இது தொடர்பாக பெலராஸ் வீரர்களின் தலைவர் பாவெல் குலசங்கா கூறுகையில், "உக்ரைனின் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். ஏனெனில், உக்ரைன் சுதந்திரமாக இல்லாவிட்டால், பெலாரஸ் எதிர்காலத்தில் சுதந்திரமாக இருக்காது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். பெலராஸ் அதிபர் சர்வாதிகாரி அலெக்சாண்டர் லுகாஷென்கோ போல இல்லாமல் நாங்கள் உக்ரைன் நாட்டிற்கு முழு ஆதரவு கொடுப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

அதிபர் ஜெலன்ஸ்கி
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் ரஷ்யாவிடம் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரம் போர் நிறுத்தம் செய்ய உக்ரைன் தனது நாட்டின் எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்றும் அவர் கூறினார். உக்ரைன் போர் 5ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை..












Click it and Unblock the Notifications