"எழுதி வைப்பா ராசா.. மூஞ்சி இருக்குன்னு".. மரத்தோடு மரமா இருக்கானே.. திகிலூட்டும் ஆந்தை
பிரேசில்: பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் அச்சுபிசகாமல் மரத்தை போலவே உடல் நிறத்தை கொண்டிருக்கும் ராட்சத ஆந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விலங்குகள், பறவைகளின் உலகம் அலாதியானது மட்டுமின்றி விசித்திரமானதும் கூட. மனிதர்களை போல வீடுகளில் வசிக்க முடியாத விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இயற்கையே தகவமைத்து தந்துள்ள தற்காப்பு அம்சங்கள் உண்மையிலேயே வியப்பை தரக்கூடியவை.
மிகச் சாதாரணமான உதாரணம், நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய பாம்பு. யோசித்து பாருங்கள்.. பாம்புக்கு மட்டும் பல்லில் விஷம் இல்லை என்றால் மற்ற விலங்குகளும் மனிதர்களாகிய நாமும் அதை என்ன பாடு படுத்திருப்போம். மனிதர்கள் செய்யும் அட்டூழியத்தில் பாம்பு இனமே அழிந்தாலும் அழிந்து போயிருக்கும். ஆனால், சில துளி விஷமே இன்றளவும் பாம்புகளை அழியவிடாமல் தடுத்து வருகின்றன.

கேமோஃப்ளெஜ்
இதுபோல்தான், சில உயிரினங்களுக்கு பிரத்யேகமான பாதுகாப்பு அம்சங்களை இயற்கை வழங்கி இருக்கிறது. அந்த அம்சங்களை கொண்ட விலங்குகளும், பறவைகளும் தங்களை அதன் மூலம் தற்காத்துக் கொள்ளவும் செய்யும், அதை பயன்படுத்தி வேட்டையாடவும் செய்கின்றன. அது விஷமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகளிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர்தான் கேமோஃப்ளெஜ் (camouflage).

எளிதில் பார்க்க முடியாது
அதாவது தங்கள் சுற்றுப்புறத்தில் இருக்கும் மரம். செடி, கொடி, மண் போன்றவற்றின் நிறத்திலேயே சில உயிரினங்கள் இருக்கும். திடீரென அதன் எல்லைக்குள் நுழையும் போது அப்படியொரு விலங்கு அங்கு இருக்கிறது என்பதையே நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அது சுற்றுப்புறத்தில் மறைந்துவிடும். உதாரணத்துக்கு, பாலைவனத்தில் மண் போன்ற நிறத்தில் இருக்கும் 'ரேட்டில் பாம்பு, பச்சோந்தி என பல உதாரணங்கள் உண்டு.

அமேசானில் புகைப்படம் எடுக்க..
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வைல்டு லைஃப் புகைப்பட கலைஞரான ஸ்டீஃபன்பெர்க், பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காட்டிற்கு கடந்த வாரம் சென்றிருக்கிறார். அங்கு மூன்று மணிநேரங்களுக்கு மேலாக சுற்றியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு புகைப்படம் ஏதும் கிளிக் ஆகவில்லை. இதனால் சோர்வாக அங்கிருந்த மரத்தின் அடியில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த பெரிய மரத்தை நீண்டநேரமாக அவர் பார்த்துள்ளார்.

கேமோஃப்ளெஜ் ஆந்தை
பின்னர் அங்கிருந்து எழுந்திருக்கலாம் என நினைக்கும் போது, அந்த மரத்தில் சிறு அசைவு தெரிந்திருக்கிறது. இதையடுத்து நன்றாக உற்று பார்க்கும் அங்கு 2 அடி உயரமுள்ள ராட்சத ஆந்தை மரமோடு மரமாக அங்கு அமர்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் ஆச்சரியமடைந்த ஸ்டீஃபன்பெர்க், அந்த ஆந்தையை உடனே புகைப்படம் எடுத்தார். இந்தப் புகைப்படம்தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ராட்சத ஆந்தை 'ஈஸ்டர்ன் ஸ்க்ரீச்'
இந்த இடத்தில் ஒரு பூனை ஒளிந்திருக்கிறது. முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்ற ரீதியில் வரும் விளையாட்டுகளை போல, மரத்தில் ஆந்தை இருப்பதே தெரியாத அளவுக்கு அது அங்கு அமர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ஆந்தை கண்ணை மூடிக்கொண்டால் அது அங்கிருப்பதை சுத்தமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 'ஈஸ்டர்ன் ஸ்க்ரீச் அவுல்' என அழைக்கப்படும் இந்த ஆந்தை, 3 அடி உயரம் வரை வளரக்கூடிய ராட்சத ஆந்தை ஆகும். தனது இந்த கேமோஃப்ளெஜ் அம்சத்தை பயன்படுத்தி மற்ற பறவைகள், சிறிய விலங்குகள் ஆகியவற்றை இவை வேட்டையாடி உண்ணும்.












Click it and Unblock the Notifications