39 பெண்களை கொன்ற வாலிபர்: பிரேசிலில் சிகப்பு ரோஜாக்கள் பாணி சம்பவம்
ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் பெண்களை குறிவைத்து கொலை செய்து வந்த சிகப்பு ரோஜாக்கள் மாதிரியான சைக்கோ சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டார்.
கடந்த பல மாதங்களாக பிரேசில் நாட்டில் பல பெண்கள் மர்மமான முறையில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு வந்தார்கள். 16 வயது முதல் 39 வயதுவரையிலான பெண்கள் மட்டுமே கொலை செய்யப்பட்டதால் அந்த நாட்டு போலீசார் இந்த கொலைகளில் ஈடுபட்டது ஒரே நபராகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

26வயது வாலிபர் கைது
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கொலையாளியை, போலீசார் கைது செய்தார்கள். டியாகோ ரோச்சா எனப்படும் 26 வயது நபரே இக்கொலைகளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

பெண்கள் மீது வெறுப்பு
தன்னை சிறுவயதாக இருந்தபோது பல பெண்கள் பலாத்காரம் செய்ததாகவும், அதன் காரணமாக பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு இவ்வாறு கொலைகளை செய்ய ஆரம்பித்ததாகவும் அந்த வாலிபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பதிவு எண்ணை மாற்றி தப்பியோட்டம்
இவர் கொலை செய்த பெண்கள் எண்ணிக்கை 39 ஆகும். 2013ம் ஆண்டில் இருந்து கொலை செய்வதை தொடங்கியுள்ளார் இந்த வாலிபர். போலீசில் பிடிபடாமல் இருக்க வாகனத்தின் பதிவு எண்களை மாற்றி தப்பிவந்துள்ளார். இவரிடம் கைத்துப்பாக்கி, கத்தி போன்ற பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைதான் டியாகோ ரோச்சா கொலை செய்ய பயன்படுத்தி வந்துள்ளார்.

11-ஆவது வயதில் பாலியல் தொல்லை
ரோச்சா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு 11 வயதாகும் வரையில் நான் சாதாரண சிறுவனாகவே வளர்ந்தேன். ஆனால் 11வது வயதில் எனது பக்கத்து வீட்டு பெண்மணி எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதன்பிறகு பல பெண்களால் ஆசைக்கு இரையாக்கப்பட்டுள்ளேன். எனவேதான் பெண்களை சுட்டுக்கொலை செய்ய முடிவு செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஓடும் பைக்கில் டுமில்
பைக்கில் சென்றபடியே சாலையோரத்தில் நிற்கும் பெண்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிடுவது இவர் வழக்கம் என போலீசார் தெரிவிக்கின்றனர். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன், மன்மதன் ஹீரோ சிம்பு வரிசையில் பிரேசிலில் ஒரு டியாகோ ரோச்சா சேர்ந்துள்ளார்.

கையில் காயம்
இதனிடையே நீதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, சிறைச்சாலையில் உள்ள ரோச்சா தனது கைகளை தானே காயப்படுத்திக் கொண்டு, சிறைக் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி தான் கொலை செய்ததற்கு காரணங்கள் உண்டு என்று உரக்க கத்தியுள்ளார். இதுகுறித்து பிரேசில் உள்ளூர் மீடியாக்கள் படத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications