ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை.. கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை! ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி
ஒட்டாவா: கனடா நாட்டில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக அகதிகளாக குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக அங்கு குடியிருக்கும் உரிமை (PR) பெற்றவர்கள் அந்நாட்டின் குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்பதால் அங்கு வீடு வாங்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
வட அமெரிக்காவின் முக்கியமான நாடுகளில் ஒன்றான கனடாவிற்குள் ஏராளமான அகதிகள் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமை வழங்கி வந்தது.
இதன் காரணமாக ஏராளமான இந்தியர்கள், ஈழத் தமிழர்கள், போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் என பலரும் கனடாவுக்கு அகதிகளாக சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

கனடா செல்லும் உலக மக்கள்
அதேபோல் வேலை தேடி கனடாவுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக பெருகி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து பலர் கனடாவுக்கு பணி நிமித்தமாக சென்று வருகிறார்கள். இதன் காரணமாக கனடாவில் வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள், அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

வீடுகளின் விலை
வீடுகளின் தேவை அதிகரித்ததன் காரணமாக அதன் விலையும், வாடகை கட்டணம் என அனைத்தும் பன்மடங்கும் உயர்ந்தது. இதன் விளைவாக அந்நாட்டில் உள்நாட்டு குடிமக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே கனடாவில் வசிக்கும் உள்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளுக்கு வீடு வழங்குவதிலும், வீடுகள் விற்பதிலும் புதிய விதிகளை கனடா அரசு கொண்டு வந்து உள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி
கடந்த 2021 ஆம் ஆண்டு கனடா தேர்தலின் போது பிரச்சாரத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த சட்டத்தை 2 ஆண்டுகள் மட்டும் தற்காலிகமாக கொண்டு வரப்படும் என உறுதியளித்தார். "கனடாவில் உள்ள வீடுகள் வியாபாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பெரும் தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

தேர்தல் அறிக்கை
இதன் காரணமாக பயன்பாட்டில் உள்ள வீடுகள் மற்றும் காலியான வீடுகள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதாக பரவலானவர்களால் பேசப்படுகிறது. வீடுகள் என்பது மக்களுக்கானவை. முதலீட்டாளர்களுக்கானது கிடையாது." என்று ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வீடுகள் வாங்க தடை
2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடன் கனடா நாட்டை சாராதவர்கள் தங்கும் இடங்கள் மற்றும் காலியான வீடுகளை வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டு இருக்கும் விளக்கத்தில், இந்த தடை வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கோடை சுற்றுலா கூடாரங்களுக்கு பொறுந்தாது எனவும் தெரிவித்து உள்ளார்கள்.

வரிகள் உயர்வு
அதேபோல், வான்கூவர் மற்றும் டொராண்டோவில் குடியிருப்புகள் அல்லாத வீடுகள் மற்றும் காலி வீடுகளுக்கான வரிகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. கனடா வங்கி சமீபத்தில் கொண்டு வந்த தீவிர நிதி கொள்கையின் காரணமாக அந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கனடா அரசின் இந்த தடை என்பது ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை சற்று காப்பாற்றி இருக்கிறது.












Click it and Unblock the Notifications