குடியேற முடியாது.. ரூல்சை இறுக்கிப் பிடித்த கனடா.. இந்திய மாணவர்களுக்கு காத்துள்ள சிக்கல்
ஒட்டாவா: கனடா நாடு, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் புதன்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய மாணவர்கள் பலரை பாதிக்கும்.
"இந்த ஆண்டு 35% குறைவான வெளிநாட்டு மாணவர் அனுமதிகளை வழங்குகிறோம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10% குறையும்," என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ X இல் பதிவிட்டுள்ளார்.

"குடியேற்றம் என்பது எங்கள் பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை - ஆனால் தவறான நபர்கள் இந்த முறையை துஷ்பிரயோகப்படுத்தி துன்புறுத்தும்போது, நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
கனடா குடியேற்றத் துறை தகவல்களின்படி, 2023 ஆம் ஆண்டில் 5,09,390 அனுமதிகளையும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1,75,920 அனுமதிகளையும் வழங்கியுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் வழங்கப்படும் வெளிநாட்டு கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 4,37,000 ஆக குறைக்கப்படும்.
மேலும், மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் மனைவிகளுக்கு வேலை அனுமதி தகுதியையும் இந்த மாற்றங்கள் கட்டுப்படுத்தும்.
ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசாங்கம், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு முன்னதாக, ஜனவரியில் கனடா வெளிநாட்டு மாணவர்களுக்கான இரண்டு ஆண்டு காலக் கட்டுப்பாட்டையும் விதித்திருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தல்தான் இதற்கான காரணமாகும். உள்ளூர் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த அரசு இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளது.
கனடா புள்ளிவிவரங்களின்படி, குடியேற்ற எண்ணிக்கை மிகப்பெரிய அதிகரிப்பு அடைய தற்காலிக குடியிருப்பாளர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள்தான் காரணம். இவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1.4 மில்லியனிலிருந்து 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.8 மில்லியனாக இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
கனடா ஏற்கனவே தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் 5% ஆகக் குறைப்பதாக உறுதி அளித்துள்ளது. இது ஏப்ரலில் 6.8% ஆக இருந்தது.
குறைந்த விலையுள்ள வீடுகள் கிடைப்பதில்லை மற்றும் கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் காரணம் என்று உள்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இதுபோன்ற நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இந்திய மாணவர்கள்:
- இந்திய மாணவர்களுக்கு கனடா மிகவும் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றாகும். கடந்த மாதம் இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, சுமார் 13.35 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர், அவற்றுள் சுமார் 4.27 லட்சம் மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர்.
- 2013 மற்றும் 2022 க்கு இடையில், கனடாவில் படிப்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
- கனடா அரசாங்கத்தின் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதி எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை காரணமாக, இந்திய மாணவர்கள் இப்போது அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளை நாட வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications