மோசடி மன்னன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும்
ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் சிறையிலுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர, ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த கீதாஞ்சலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர் சுமார் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பான வழக்கு இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

தப்பியோடிய மெகுல் சோக்சி
இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர், கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, சில ஆண்டுகளுக்கு முன் அங்குத் தப்பியோடிவிட்டார். பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ள மெகுல் சோக்சியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த வாரம் அவர் ஆன்டிகாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார்.

சிபிஐ குழு
அப்போது மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்று டொமினிக்கா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவரை நாடு கடத்த தேவையான ஆவணங்களை டொமினிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. மேலும், ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது.

ஷர்தா ரவுத்
சிபிஐ அதிகாரியான ஷர்தா ரவுத் தான் இந்தியாவில் மெகுல் சோக்சி- பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் வழக்கை விசாரணை செய்து வருகிறார். இந்தியாவில் மெகுல் சோக்சி தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என்பதால் அவரை நேரடியாக நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என இந்தியா சார்பில் டொமிக்கா நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சட்ட ரீதியாகச் சிக்கல்?
ஆனால் அதேநேரம் மெகுல் சோக்சி தற்போது ஆன்டிகுவா குடிமகன் என்பதால் அவருக்கு அந்நாட்டு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆன்டிகுவா நாட்டின் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மெகுல் சோக்சி இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்யவில்லை. எனவே, சட்டப்படி அவர் இந்தியக் குடிமகன். இதனால் அவரை நாடு கடத்துவதில் சட்ட ரீதியாக எவ்வித சிக்கலும் எழாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கும்
இன்று டொமினிக்கா நீதிமன்றம் அவரை நாடு கடத்த அனுமதிக்கும்பட்சத்தில், அந்நாட்டுச் சிறைத் துறை அவர் இந்தியா தரப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். ஷர்தா ரவுத் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழு, ஏற்கனவே அங்கு இருப்பதால், அவர்களிடம் மெகுல் சோக்சி ஒப்படைக்கப்படுவார். அதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார். இந்தியாவில் விமானம் தரையிறங்கியதும், ஷர்தா ரவுத் அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்வார்.












Click it and Unblock the Notifications