இவ்வளவு அடி வாங்கியும்.. அடங்கலையே! இந்தியாவுடன் எல்லை பிரச்சனையை கிளறும் நேபாளத்தின் மாஜி பிரதமர்
காத்மாண்டு: ஜென்-z இளைஞர்கள் போராட்டத்தால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சர்மா ஒலி, பிரச்சனைகளுக்கு காரணம் இந்தியா என்று பிதற்றி வந்திருந்தார். தற்போது இந்தியாவுடன் எல்லை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்.
வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, ஊதியம் குறைவு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நேபாள அரசு கோட்டை விட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்வதற்கு பதிலாக, சோஷியல் மீடியாக்களை முடக்கும் வேலையில் அரசு இறங்கியது.

இளைஞர்களின் போராட்டம்
இதனால், இளைஞர்களின் தடையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கினர். மறுபுறம் எப்போடா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த, பழமைவாத கட்சியான ராஷ்ட்ரிய பிரஜா தந்திர கட்சியானது, இந்த போராட்டத்தை டேக் ஓவர் செய்து, ஆட்சிக்கவிழ்ப்பு பணியை முன்னெடுத்திருக்கிறது. எனவே இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. வன்முறை காரணமாக போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
திடீர் தேசப்பற்று
போராட்டம் காரணமாக பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்டோர் பதிவி விலகியுள்ளனர். இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு சர்மா ஒலி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பரப்புகள் நேபாளத்திற்குச் சொந்தமானவை என்று வலியுறுத்தியுள்ளார். அரசுக்கு எதிராக மக்களின் கவனம் திரும்பும்போதெல்லாம் 'தேசப்பற்றை' ஆட்சியாளர்கள் கையில் எடுப்பார்கள். அதேபோலத்தான் நேபாளத்திலும், இந்தியாவை காட்டி தேசபற்று விவகாரம் கையில் எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
சர்மா ஒலியின் கடிதம்
சர்மா ஒலி தனது கடிதத்தில், "நான் இயற்கையாகவே சற்று பிடிவாதமானவன். இந்த பிடிவாதம் இல்லை என்றால், இந்த கடினமான சூழ்நிலைகளில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. பிடிவாதமாக இல்லாமல் நான் பின்வாங்கியிருந்தால், எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்திருக்கும். லிம்பியாதூராவை உள்ளடக்கிய நேபாளத்தின் வரைபடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்படாமல் இருந்திருந்தால் எனது வாழ்க்கை வேறு திசையில் இருந்திருக்கும். புகழும் பதவியும் எனக்கு முக்கியமில்லை.
லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா நமக்கு சொந்தமானவை என்று நான் வலியுறுத்தி வருகிறேன். இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட, ஸ்ரீ ராமர் இந்தியாவில் அல்ல, நேபாளத்தில் பிறந்தார் என்று நான் வலியுறுத்தியுள்ளேன். இந்த பிடிவாதங்களில் இருந்து நான் பின்வாங்கியிருந்தால், எனக்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்திருக்கும், பல சாதனைகளை நான் செய்திருப்பேன்.
எல்லை பிரச்சனை
லிம்பியாதுரா உள்ளடங்கிய நேபாள வரைபடத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், அல்லது மற்றவர்கள் எனது விருப்பங்களைப் பின்பற்றியிருந்தால், எனது வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கும். சோஷியல் மீடியா நிறுவனங்கள், நேபாளத்தில் வணிகம் செய்யும்போது விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தியிருந்தேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருந்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகக் காட்டும் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டது.
வரைப்படத்தில் முரண்பாடு
இந்த வரைப்படத்திற்கு சர்மா ஒலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். குறிப்பாக காலாபானியை இந்தியாவின் பகுதி அல்ல என்று கூறினார். ஆனால் மத்திய அரசு இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக நாங்கள் வெளியிட்ட வரைபடம் மிகவும் சரியானது என்று விளக்கமளித்தது. ஆனாலும் அடங்காத சர்மா ஒலி, காலாபானி, லிபுலேக் கணவாய் மற்றும் லிம்பியாதூரா ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியாவின் சுமார் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பை நேபாளத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டார். நேபாள நாடாளுமன்றம் இந்த புதிய வரைபடத்தை அங்கீகரிக்க நாட்டின் அரசியலமைப்பைத் திருத்தியதுடன், அதை ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பியது.
இந்த விஷயத்தைதான் தற்போது தனது கடிதத்தில் சர்மா ஒலி குறிப்பிட்டிருக்கிறார். இவ்வளவு அடி வாங்கி, பதவியை ராஜினாமா செய்தும் கூட இந்தியாவை சீண்டுவதை சர்மா ஒலி விடவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications