முதலில் சீனா, இப்போது பாகிஸ்தான்.. வரிசையாக இலங்கை செல்லும் போர்க்கப்பல்கள்! இந்தியாவுக்கு சிக்கல்?
கராச்சி: இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தனது கப்பலை அங்கு நிறுத்துகிறது.
சீனாவின் செயல்பாடுகள் தெற்கு ஆசியாவில் தொடர்ச்சியாகப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முதலில் தைவான் விவகாரத்தில் அமெரிக்க சாபாநயகர் அங்கே இருக்கும் போதே போர்ப் பயிற்சியை மேற்கொண்டது.
அடுத்ததாக இலங்கை பக்கம் திரும்பியது. இலங்கை வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிறகும் கூட சீனாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

போர்க்கப்பல்
இந்தச் சூழலில் இப்போது அடுத்த பரபர நிகழ்வாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான போர்க்கப்பலும் இலங்கைக்குச் செல்கிறது. முதலில் இந்தக் கப்பல் வங்கதேசத்தின் சட்டோகிராம் துறைமுகத்திற்குத் தான் செல்லவிருந்தது. இருப்பினும், வங்கதேசம் இதற்கு அனுமதி மறுத்த நிலையில், இப்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் அந்நாட்டுக் கடற்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ கப்பல் இடையே இலங்கைக்குச் செல்கிறது.

சீனா
இந்த ராணுவ கப்பலைச் சீனா தான் உருவாக்கி இருந்தது. சீனா உருவாக்கி, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல் அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்குச் செல்கிறது. ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பால் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரும் சீன உளவு கப்பலின் வருகையைக் காலவரையின்றி தாமதப்படுத்துமாறு இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது மறுபுறம் பாகிஸ்தான் ராணுவ கப்பல் இலங்கைக்குச் செல்கிறது.

அனுமதி
முன்னதாக இந்தக் கப்பல் முதலில் வங்கதேச துறைமுகத்திற்குத் தான் செல்லவிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் இந்த கப்பலுக்கான அனுமதியை வங்கதேசம் தரவில்லை. அதன் பின்னரே இதற்கு இலங்கை அனுமதி அளித்தது. சீனா உருவாக்கிய இந்தப் போர்க் கப்பல் அதிநவீன வசதிகளைக் கொண்டதாகும். லேசர் மூலம் வழிகாட்டும் ஏவுகணைகளைச் செலுத்தும் வசதிகளை இந்த போர்க்கப்பல் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள்
சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட தைமூர் போர்க்கப்பல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கராச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லும் வழியிலேயே அந்தப் போர்க்கப்பல் மலேசியா மற்றும் கம்போடியாவில் பயிற்சிகளிலும் பங்கேற்றது. சீனாவின் கப்பல் கட்டும் தளத்தில் இருந்தே இந்தக் கப்பலைப் பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான வீரர்கள் தான் இயக்கி வருகின்றனர்.

அதிநவீன கப்பல்
தைமூர் போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்காகக் கட்டப்பட்ட நான்கு வகை போர்க் கப்பல்களின் இரண்டாவது கப்பலாகும். முதல் கப்பல் கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிலையில், மற்ற இரு இரண்டு போர்க்கப்பல்கள் சீனாவில் கட்டப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இப்போது இருக்கும் போர்க்கப்பல்களில் மிகவும் அதிநவீனமானது ஆகும்.
Recommended Video

யுவான் வாங் 5
முன்னதாக சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் 5 என்ற கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. இந்தியாவும் கூட சீன ராணுவ கப்பலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் இந்த கப்பலைச் சீனா ஆய்வு கப்பல் என்று கூறினாலும், இதன் மூலம் ஏவுகணை செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியுமாம். இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ராணுவ கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதம் செய்ய இலங்கை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications