2026 கொண்டு வந்திருக்கும் கெட்ட செய்தி! வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சீனா! நமக்குதான் ஆபத்து!
பெய்ஜிங்: உலகின் வேறு எந்த நாடும் செய்யாத மாபெரும் சாதனையை சீனா 2025ல் செய்திருக்கிறது. அதாவது அந்நாட்டின் வர்த்தக உபரி 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற அளவில் உயர்ந்திருக்கிறது. இது இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கும் ஆபத்து என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2025 யாருக்கு பாசிட்டிவாக இருந்ததோ இல்லையோ, சீனாவுக்கு மட்டும் படு பயங்கர பாசிட்டிவாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சீனா தனது பொருட்களை அள்ளி கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக சீனாவின் வர்த்தக உபரி அதிகரித்திருக்கிறது.

வர்த்தக உபரி என்றால் என்ன?
ஒரு நாடு 100 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது, அதே நேரத்தில் 50 கோடி டாலர் அளவுக்குதான் இறக்குதி செய்கிறது எனில், அந்நாடு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது என்று அர்த்தம். அந்நாட்டிடம் அதிக அளவில் வெளிநாட்டு பணம் இருக்கிறது என்றும், வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது என்றும் அர்த்தம். இதைத்தான் வர்த்தக உபரி என்று சொல்வார்கள்.
சீனாவின் ஏற்றுமதி
வேறு எந்த நாடாவது வர்த்தக உபரியை எட்டுகிறது என்றால் அது நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால், சீனா இந்த புள்ளியை எட்டியிருப்பது ஒட்டுமொத்த ஆசியாவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. இத்தனைக்கும் சீனாவுக்கு எதிராக டிரம்ப் ஏகப்பட்ட வரியை போட்டிருந்தார். வரியாவது, சொரியாவது என எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி புதிய சாதனயை படைத்திருக்கிறது சீனா. அமெரிக்காவை கழற்றிவிட்டு விட்டு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு தனது ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது.
மட்டுமல்லாது அமெரிக்காவுக்கு நேரடியாக அனுப்ப முடியாத பொருட்களை, மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைத்திருக்கிறது. இப்படியாக வர்த்த உபரியை சீனா எட்டியிருக்கிறது.
ஏன் ஆபத்து?
இது ஏன் இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு ஆபத்து என்பதை நிபுணர்கள் விளக்கியுள்ளனர். சீனா தனது பொருட்களை குறைந்த விலையில் விற்கிறது. நம்மூரில் டாடா நிறுவனம் ஒரு காரை உருவாக்குகிறது எனில், அந்த உற்பத்திக்கு தேவையான நிலம், நீர், மின்சாரம் போன்றவற்றை அரசு ஓரளவுக்கு குறைவான விலையில் கொடுக்கும். இதையெல்லாம் வாங்கி, கார்களை டாடா நிறுவனம் உற்பத்தி செய்து, அதை வெளிநாடுகளில் விற்கும். இதன் மூலம் வரும் லாபத்தில் அரசுக்கு எந்த பங்கும் கிடையாது என்பது தனிக்கதை.
சைனா தயாரிப்புகள்
ஆனால், சீனாவில் பொருட்களை விற்பது தனி நிறுவனம் கிடையாது. சீன அரசாங்கமே நேரடியாக இதில் ஈடுபடுகிறது. நிறுவனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை மிக மிக குறைந்த விலையில் கொடுப்பது மட்டுமல்லாது, இந்த தயாரிப்புகளுக்கு மானியத்தையும் கொடுக்கிறது. இதனால் இந்த பொருளின் விலை மலிவாக இருக்கிறது. அதே நேரம் தரமாகவும் இருக்கிறது. ஒரு காலத்தில் சைனா புராடெக்ட் என்று ஏளனம் பேசியவர்கள், இன்று அதே சைனா தயாரிப்புகளைதான் நம்பி பயன்படுத்துகிறார்கள்.
உள்ளூர் தொழில்கள்
மலிவு விலை காரணமாக இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளின் நிறுவனங்கள், சீனாவுடன் போட்டி போட முடியவில்லை. அதிநவீன் சொகுசு காரை 1 லட்சம் டாலருக்கு ஐரோப்பிய நிறுவனம் விற்பனை செய்கிறது எனில், அதைவிட அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட காரை, வெறும் 50 ஆயிரம் டாலர்களுக்கு சீனாவால் உருவாக்கி விற்பனை செய்ய முடியும். இப்படி செய்தால் ஐரோப்பிய நிறுவனங்களால் சந்தையில் தாக்குபிடிக்க முடியாது. அது காலியாகிவிடும்.
இந்தியாவுக்கு ஆபத்து
இந்தியாவும் இப்படித்தான். சென்னை சாலைகளில் இப்போது டெஸ்லாவை விட BYD எனும் சீன கார்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது. இப்படியே போனால், உள்ளூர் வியாபாரிகள் கடையை சாத்திவிட்டு போய்விடுவார்கள். ஒருமுறை உள்நாட்டில் தொழில் படுத்துவிட்டது எனில், சீனா நுழைந்துவிட்டது எனில், மீண்டும் நம்மால் உள்ளூர் தொழில்களை உயிர்ப்பிக்கவே முடியாது. வேலை வாய்ப்புகள், உள்நாட்டின் தனித்துவம் என எல்லாமும் அழிந்து போய்விடும். எனவேதான் சீனாவின் இந்த வளர்ச்சி ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications