'விமானத்தை'விட செம வேகம்..! 600 கிமீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில்.. சீனாவின் அடுத்த பாய்ச்சல்
பெய்ஜிங்: மணிக்கு சுமார் 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலைச் சீனா அறிமுகம் செய்துள்ளது. இதனை மிதக்கும் ரயில் என்ற சீனா அழைக்கிறது.
Recommended Video
அமெரிக்கா போன்ற நாடுகள் விமான போக்குவரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விரைவாகப் பயணிக்கலாம், குறைவான விபத்துகள் ஆகியவை காரணமாக விமான போக்குவரத்திற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால், விமானங்களால் ஏற்படும் காற்று மாசு மிக அதிகமாக உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மெல்ல ரயில்களில் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

புதிய ரயில்
உலக அளவிலேயே அதிநவீன ரயில்கள் தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் தான் கடும் போட்டி உள்ளது. பல நாடுகளும் இந்த இரண்டு நாட்டின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சீனா 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிநவீன மின்காந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த ரயில் மூலம் கோவையில் இருந்த சென்னைக்கு ஒரு மணி நேரத்திற்குக் குறைவான நேரத்தில் பயணிக்கலாம்.

600 கிலோமீட்டர்
முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. மேக்லேவ் எனப் பெயரிடப்பட்டுள்ள ரயில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் போக்குவரத்து வாகனம் என்ற சிறப்பை இந்த ரயில் பெறும். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் மின்காந்த ரயில் தொழில்நுட்பத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

என்ன தொழில்நுட்பம்
இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. அதாவது இதன் தண்டவாளம் மின் காந்தங்களைக் கொண்டிருக்கும். அதேபோல ரயிலின் அடிப்புறமும் மின்காந்தத்தைக் கொண்டிருக்கும். காந்தத்தின் ஒரே துருவம் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், இந்த ரயில் மிதக்கத் தொடங்கும். இதன் மூலம் அதிவிரைவாக இந்த ரயிலால் செல்ல முடிகிறது.

விமானத்தைவிட வேகம்
'மிதக்கும் ரயில்' என அழைக்கப்படும் இந்த ரயிலைச் சீனாவின் குயிங்டாவ் நகரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், ஷாங்காய் பெய்ஜிங் இடையேயான 1,300 கிலோ மீட்டரை வெறும் 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். இது விமானத்தைவிட விரைவானதாகும். இதே இரண்டு நகரங்களுக்கு இடையே விமானத்தின் மூலம் பயணித்தால் 3 மணி நேரம் ஆகும். அதேபோல தற்போது உள்ள புல்லட் ரயில் பயணித்தால் 5.5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications