“எல்லை விஷயத்தில் சமாதானம் பேச தயார்!” லடாக் பஞ்சாயத்தில் வழிக்கு வந்தது சீனா!
பெய்ஜிங்: லடாக் விஷயத்தில் முரண்டு பிடித்து வந்த சீனா, தற்போது சமாதானம் பேச தயார் என்று கூறியிருக்கிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவுடன் இந்தியா காட்டி வந்த நெருக்கம், சீனாவின் கண்களை உறுத்தியிருக்கும். எனவேதான் சமாதானம் பேச வந்திருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறியிருக்கிறார். அவரது கருத்து இந்தியா, சீனா இடையே மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது.

நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான், "லடாக் விஷயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நாங்கள் பயனுள்ள வகையில் செயல்படுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். இரு தரப்பு சார்பில் பிரச்சனையை சரி செய்ய பல்வேறு முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் எங்கள் அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் சந்திந்து உரையாடியபோது லடாக் குறித்து பேசப்பட்டிருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள அமைதிக்கு காரணமே இந்த சந்திப்புதான். இவர்கள் பேசியதையடுத்துதான் டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லை பகுதியிலிருந்து இரு நாட்டின் படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மட்டுமல்லாது, பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசிக்கொண்டனர். தொடர்ந்து, சீனாவில் இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையும் கூட நடைபெற்றது. இதில் அஜீத் தோவல் பங்கேற்றிருந்தார். இப்படியாக தொடர் பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார். வு கியானின் இந்த பேச்சுகள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன.
காரணம், தைவான் விஷயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அமெரிக்கா தைவானுக்கு நேரடியாக சப்போர்ட் செய்கிறது. இருப்பினும், தைவானை விட்டுக்கொடுக்க சீனா தயாராக இல்லை. போர் விமானங்களை அனுப்பி, தைவான் கடல் பகுதியில் குண்டுகளை வீசி பயிற்சி செய்வது, போர் கப்பல்களை அனுப்பி பயமுறுத்துவது என மூர்க்கமாக நடந்துக்கொள்ளும் சீனா, லடாக் விஷயத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சொல்லியிருப்பது வரவேற்கதக்கதாக இருக்கிறது.
ஆனால் சீனாவின் டோன் இப்படி சைலன்ட்டாக இருக்க முக்கிய காரணம், இந்தியா-அமெரிக்காவின் சமீபத்திய நெருக்கம்தான் என்றும் சர்வசேத அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்ப்பை சந்தித்திருந்த மோடி, ஆயுத கொள்முதல் குறித்து பேசியிருந்தார். அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானமான F-35 இந்தியாவுக்கு விற்க தயார் என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார். இது எல்லாவற்றையும் சீனா உஷாராக கவனித்திருக்கும். லடாக் விஷயத்தில் ஓவராக பிரஷர் போட்டால் அமெரிக்காவிடம் போய் இந்தியா நிற்கும். ஏற்கெனவே தைவான் விஷயத்தில் அமெரிக்கா மூக்கு நுழைத்திருக்கிறது. அடுத்து லடாக்கை காரணம் காட்டி இந்த விஷயத்திலும் மூக்கை நுழைத்தால் நமக்கு டென்ஷன் அதிகமாகிவிடும் என சீனா பயந்திருக்க கூடும்.
ஆகவேதான் லடாக் விஷயத்தை சீனா சாஃப்ட்டாக கையாள்கிறது என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ, சீனா நம்முடைய பிரச்சனைக்கு வராமல் இருந்தால் சந்தோஷம்தான்.
சீன பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் இந்த பேச்சு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications