பாகிஸ்தானுக்கு சீனா கொடுக்கும் வாய்ப்பு.. இந்தியாவுக்கு போட்டியா? இந்த விஷயம் லேசுபட்டது கிடையாது!
பெய்ஜிங்: பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப சீனா முன்வந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து கடந்த 1984ம் ஆண்டு, சோவியத் உதவியால் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்தார். அதற்கு பிறகு இந்த ஆண்டு (2025) சொந்தமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் இந்த திட்டத்திற்கு, சீனா நேரடி சவால் விடுத்துள்ளது.

சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான CMSA, பாகிஸ்தானிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து, அவருக்கு முறையான பயிற்சிகளை வழங்கி, விண்வெளிக்கு அனுப்பி வைக்கும். இதற்கு பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SUPARCO உதவும். சமீபத்தில் சீனாவுக்கு சென்றிருந்த பாக் பிரதமர் இது தொடர்பான ஒப்பந்தத்தை பேசி முடித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் செயற்கைக்கோள்களை சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்திருந்தது. இப்படி இருக்கையில் சீனாவின் விண்வெளி மையத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்தவரை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
சீனாவின் இந்த உதவிக்கு பின்னால் பல கணக்குகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானை வளர்க்க சீனா ஆர்வம் காட்டுவதன் வெளிப்பாடாகவே இந்த திட்டம் இருக்கிறது. அதாவது இந்தியா ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்தியாவிலிருந்து ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றிருந்தாலும், அவரை அனுப்பியது சோவியத் ரஷ்யாதான். சொந்தமாக நாம் இதுவரை மனிதர்களை அனுப்பவில்லை.
சொந்த முயற்சியில் இதை சாத்தியப்படுத்தவே, ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா தனது சொந்த முயற்சியில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புகிறது. இது உலக சாதனை. இந்த சாதனையை பேசுபொருளாக்குவதை தவிர்க்கவே, பாகிஸ்தானை சேர்ந்தவரை விண்வெளிக்கு அனுப்ப சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டன. 2024ல் மிஷன் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இன்னும் மிஷன் தொடங்கப்படவே இல்லை.
இதில் சீனாவுக்கும் சில நன்மைகள் இருக்கின்றன. சீனாவின் பொருளாதார பாதை பாகிஸ்தான் வழியாகத்தான் செல்கிறது. இந்த பாதையில்தான் வணிக போக்குவரத்தை செயல்படுத்த சீனா முயன்று வருகிறது. எனவே, இதற்கான ஒத்துழைப்பை பெற பாகிஸ்தானிலிருந்து ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் சாத்தியமாக்க முடியும். இந்த கணக்கின் அடிப்படையில்தான் சீனா திட்டத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது.
எது எப்படியோ பாகிஸ்தானும் வளரும் நாடுதான். அந்த நாட்டிலிருந்து ஒருவர் விண்வெளிக்கு செல்லது பாராட்டக்கூடியதுதான். இருப்பினும் அதை இந்தியாவுக்கு எதிரானதாக கட்டமைத்ததால் வளர்ச்சி என்பது போட்டியாக இல்லாமல், பொறாமையாகவும் சண்டை சச்சரவாகவும் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications