சீனாக்காரன் மூளையை பாருங்க..பூங்காவில் திடீரென வரி குதிரையாக மாறிய கழுதை.. ஏமாந்துப்போன மக்கள்
பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்களை கவர வேண்டும் என்பதற்காக பொழுதுபோக்கு பூங்காவில் கழுதைக்கு, வரிக்குதிரை போல் பெயிண்ட் அடித்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் தயாரிப்புகள் அனைத்துமே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. செல்போன் முதல் போர் விமானங்கள் வரை சீனா தயாரிப்புகள் என்பது சந்தேகப்படும்படியாக தான் இருக்கிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யாவிடம் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டும் நாடுகள் சீனா பக்கம் திரும்பி கூட பார்ப்பது இல்லை.

சரி இப்படி செல்போன் முதல் போர் விமானங்கள் வரை தான் தரமில்லாமல் சீனா தயாரிக்கிறது என்று நம்பினால் அது தான் இல்லை. சீனாவின் உயிரியல் பூங்காவிலும் அந்த நாட்டு மக்களை ஏமாற்றி பணம்பறிக்கும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது சீனாவின் ஷான்டாங் மகாணத்தில் ஜிபோ நகர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு மக்கள் வந்து செல்வது குறைவாக இருந்தது. இதனால் மக்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பூங்காவில் வரிக்குதிரைகளை பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து வரிக்குதிரைகளும் பொழுதுபோக்கு பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் அங்குள்ள வரிக்குதிரைகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. பொதுவாக வரிக்குதிரைகளின் உடல்கள் பளபளப்பாகவும், திடமாகவும் இருக்கும். ஆனால் பூங்காவில் உள்ள வரிக்குதிரைகள் அப்படி இல்லை. இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
இதுபற்றி கேள்வி எழுப்பினர். அப்போது தான் அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது. அதாவது பூங்காவில் இருப்பது உண்மையான வரிக்குதிரை இல்லை. மக்களை கவர வேண்டும் என்பதற்காக பூங்கா நிர்வாககம் கழுதைகளின் உடலில் வரிக்குதிரை போன்று வெள்ளை மற்றும் கருப்பு நிற பெயிண்ட் பூசி ஏமாற்றியது தெரியவந்தது. இதனை பூங்கா நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் பூங்காவில் கழுதைக்கு வரிக்குதிரை போல் பெயிண்ட் பூசும் ஊழியரின் போட்டோவும் வெளியானது. இதனால் பார்வையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். பொழுதுபோக்கு பூங்காவில் மக்களை ஏமாற்றும் செயல்களை தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நாம் இன்னொரு விஷயத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அதாவது சீனாவில் உள்ள பூங்காவில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நாய்களின் உடலில் பாண்டா, புலி போன்று பெயிண்ட் அடித்து பூங்கா நிர்வாகிகள் பொதுமக்களை ஏமாற்றி இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications