படிக்காமல் நீண்ட நேரம் கேம் விளையாடிய மகன்.. "அருணாசல பட ஸ்டைலில் தண்டனை கொடுத்த தந்தை"
சீனாவில் படிக்காமல் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடிய மகனை 17 மணி நேரம் தூங்க விடாமல் கேம் விளையாட வைத்து நூதன தண்டனை கொடுத்துள்ளார் அவனது தந்தை.
பீஜிங்: சீனாவில் படிக்காமல் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடிய மகனை விடிய விடிய சுமார் 17 மணி நேரம் தூங்க விடாமல் கேம் விளையாட வைத்து அவனது தந்தை நூதன தண்டனை அளித்துள்ளார். அருணாச்சலம் திரைப்படத்தில் பீடி குடிக்கும் பழக்கம் போக வேண்டும் என்பதற்காக மகன் ரஜினிகாந்துக்கு பண்டல் பண்டலாக பீடி வாங்கி கொடுத்தது போல் வினோத முறையை இவரும் கடைப்பிடித்துள்ளார்.
தற்போதைய நவீன யுகத்தில் செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரும் தங்கள் கைகளில் ஆறாம் விரலை போல செல்போனை எந்த நேரமும் வைத்து பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். பெற்றோர்கள் இப்படி எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதை பார்க்கும் குழந்தைகள் செல்போனை பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

செல்போனில் விளையாட்டு
குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால் சிறுவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து நேரம் கிடைக்கும் போது எல்லாம் விளையாடுவதை காண முடியும். அதிலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் பலரும் படிக்காமல் கூட செல்போனை வைத்து வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்து இருப்போம். அப்போது பெற்றோர்கள் அதட்டி கண்டிப்பதுண்டு. இது எல்லாம் எல்லா வீட்டிலும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வுதான். இதில் வியப்பதற்கு பெரிய விஷயம் ஒன்று இல்லை.

கொடூர தண்டனை கொடுத்த தந்தை
ஆனால் சீனாவில் வீடியோ கேம் விளையாடியதற்காக தனது 11 வயது மகனை 17 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாட வைத்து கொடூர தண்டனை கொடுத்துள்ளார். கேட்பதற்கே அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: - சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஷென் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது தந்தையின் செல்போனை எடுத்து விளையாடி இருக்கிறான்.

அருணாசலம் படத்தில் பீடி பிடித்தது போல..
பள்ளி பாடத்தை படிக்காமல் பின் இரவு வரை மகன் வெகு நேரம் செல்போனில் கேம் விளையாடியதை பார்த்த அந்த சிறுவனின் தந்தை, தனது மகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த தண்டனைதான் மிகவும் கொடூரமானது. ஆம், அருணாசலம் படத்தில் ரஜினிகாந்த் பீடி குடித்ததற்காக அவரது தந்தை ஒரு அறை முழுக்க பீடிகளை பிடிக்க சொன்னதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

17 மணி நேரம் ஓய்வே எடுக்காமல்
அதே மாதிரியான ஒரு தண்டனையை தனது மகனுக்கு கொடுக்க நினைத்து, விடிய விடிய செல்போனில் கேம் விளையாட வைத்துள்ளார் அந்த சிறுவனின் தந்தை. அதாவது நள்ளிரவு 1 மணி தொடங்கி மறுநாள் மாலை 6 மணி வரை இடை விடாது தொடர்ந்து கேம் விளையாட வைத்து இருக்கிறார். 17 மணி நேரம் ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து கேம் விளையாடியதால் சிறுவன் வாந்தி எடுத்துள்ளான். அதன்பிறகே சிறுவனை விட்டு இருக்கிறார் அவனது தந்தை. அது மட்டும் இன்றி மொத்த காட்சிகளையும் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பியிருக்கிறார்.

இப்படியா தண்டனை கொடுப்பீங்க
மேலும், இனிமேல் இப்படி நேரம் கடந்து செல்போனில் வீடியோ கேம் விளையாட மாட்டேன் என்றும் கம்ப்யூட்டரில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த பிறகே அவனை விட்டதாக கூறியிருக்கும் அந்த கொடூர தந்தை, வேறு யாரும் இதை முயற்சிக்க வேண்டாம் என்று அட்வைஸ் வேற கொடுத்து இருக்கிறார். செல்போனில் கேம் விளையாடியதற்காக இப்படி ஒரு கொடூர தண்டனை கொடுக்க வேண்டுமா? என பலரும் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications