கொலம்பியாவில் ஷாக்! அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு.. மக்கள் பதற்றம்!
பொகோட்டா: கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. நேற்று ஜனநாயக மையக் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் 'மிகுவல் உரிபே' பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது 'உரிபே' உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று பொகோட்டாவில் பிரசார பேரணியில் இவர் பங்கேற்றிருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரையும் கைது செய்திருக்கின்றனர். ரத்த வெள்ளத்தில் உரிபே மீட்கப்படும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் கொலம்பியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொகோட்டா மேயர் கார்லோஸ் கலான் கூறுகையில், "பொகோட்டாவின் ஃபோன்டிபோன் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அவரை உடனடியாக நாங்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்திருக்கிறோம். விரைவில் அவர் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், "உரிபேயின் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது பேரிழப்புதான். இந்த வலியை எப்படி கடந்து போவீர்கள் என்று தெரியவில்லை. உரிபேயின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதலாக இருப்போம்" என்று கூறியுள்ளார். இப்போது வரை உரிபேயின் உடல்நிலை குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
உரிபேயின் குடும்பம் படுகொலைகளில் சிக்குவது இது முதல்முறை கிடையாது. உரிபேயின் தாய் 'டயானா டர்பே' ஒரு பத்திரிகையாளர். 1991ல் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபருக்கு எதிராக தொடர்ந்து தீவிரமாக இயங்கி வந்தார். இதனால் இவர் எஸ்கோபாரின் கும்பலால் கடத்தப்பட்டார். அவரை மீட்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து தற்போது அவரது மகனும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாயக மையக் கட்சி, "இந்த தாக்குதலை வெறும் அரசியல் தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக பார்க்க முடியாது. இது கொலம்பிய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்" என விமர்சித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications