இஸ்ரேல்- ஈரான் போர்.. உலகம் சந்திக்க போகும் கற்பனைக்கும் எட்டாத விளைவு.. உயர்ந்தது கச்சா எண்ணெய்
தெஹரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாக அமெரிக்கா எச்சரித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனிடையே அமெரிக்கா எச்சரித்தது போலவே ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனம், லெபனான் நாடுகளை அடுத்தடுத்து தாக்கி வந்த இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக போரில் குதித்துள்ளது. இனி கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை உலகம் சந்திக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர தாக்குதலில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டார்கள். இதனால் பொங்கி எழுந்த இஸ்ரேல், காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க போர் தொடுத்தது. தற்போது வரை போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட பகுதிகளில் 40,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். காசா பகுதியே முற்றிலும் உருகுலைந்து போய்விட்டது. அதன் சேதத்தை சரி செய்யவே முடியாத அளவிற்கு கொடூரமான நிலைக்கு காசா பகுதியும், பாலஸ்தீனமும் தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானில் சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பின்னர் இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அண்மையில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றது. இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது நேரடியாக போரில் குதித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதலை துவங்கிய உள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு மேலே ஏராளமான ஏவுகணைகள் பறந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளை இஸ்ரேல் அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்த தாக்குதலால் கடும் கோபம் அடைந்துள்ள, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது" என்றார். இதனிடையே இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் அரசு ஊடகமான ஐஆர்ஜிசி டிவியும் உறுதி செய்திருக்கிறது . இந்த போரில் அமெரிக்காவும் இறங்கும் என்று தெரிகிறது. இதனால் ஈரான், அமெரிக்கா இடையேயும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.
அப்படி அமெரிக்கா நேரடியாக களம் இறங்கினால், ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக போரில் இறங்கினால் இந்த உலகம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் இரண்டு நாடுகளுமே அணுகுண்டுகளை அளவுக்கு அதிகமாக வைத்துள்ளன. இந்த இரண்டு நாடுகளுமே இந்த உலகத்தை சில நாளில் அழிக்கும் வல்லமை உடையவை என்பதால் அச்சம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அதிகப்படியான போர் பதற்றம் காரணமாக , கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 71.888 டாலராக உயர்ந்துள்ளது. இன்னமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications