ஷாகீப் அல் ஹாசனுக்கு விழுந்த அடி.. சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு.. என்ன காரணம்?
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகீப் அல் ஹாசனின் சொத்துகளை பறிமுதல் செய்ய டாக்கா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எம்பியாக இருந்தவர். கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தற்போது இன்னொரு வழக்கில் அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றஆணை பிறப்பித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகீப் அல் ஹாசன். இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். தனது அதிகப்படியான கோபத்தால் பல முறை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கதேச அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக அவர் வலம் வந்தார்.
இதனால் அவர் தொடர்ந்து தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார். தற்போது ஷாகீப் அல் ஹாசன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே தான் அவர் அரசியலிலும் கால்பதித்தார்.

வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் சார்பில் மகுரா - 1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்பியாக அவர் செயல்பட்டார். அதன்பிறகு கடந்த ஆண்டு அவரது வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஷேக் ஹசீனா அரசு கலைந்தது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடந்து வருகிறது.
இதனால் ஷாகிப் அல் ஹாசனின் பதவியும் பறிபோனது. மேலும் அவாமி லீக் கட்சி தலைவர்கள் மீது இடைக்கால அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஷாகிப் அல் ஹாசன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதாவது வங்கதேசத்தில் நடந்த மாணவர்களின் போராட்டங்களில் ரபீகுல் இஸ்லாம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஷாகீப் அல் ஹாசனின் பெயரும் சேர்க்கப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இப்படி தொடர்ந்து ஷாகீப் அல் ஹாசனுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் டாக்கா நீதிமன்றம் ஷாகீப் அல் ஹாசனின் சொத்துகளை பறிமுதல் செய்ய அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது ஷாகிப் அல் ஹாசன், ஷாகிப் அல் ஹாசன் அக்ரோ பார்ம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் நிர்வாக இயக்குநராக காஜி சகாகிர் உசேன் உள்ளார். இயக்குநர்களாக இமாதுல் ஹக், மாலைகார் பேகம் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிறுவனம் பனானியில் உள்ள ஐஎஃப்ஐசி நிறுவனத்தில் இருந்து தொழிலுக்காக கடன் வாங்கியது. இந்த கடனை திரும்ப வழங்க அந்த நிறுவனம் சார்பில் ரூ.4.14 கோடி மதிப்பிலான 2 காசோலைகள் வழங்கப்பட்டன. அந்த காசோலைகள் போதிய பணம் இன்றி திரும்பி வந்தது. இருப்பினும் ஷாகிப் அல் ஹாசன் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் வங்கி சார்பில் ஷாகிப் அல் ஹாசன் உள்பட 4 பேர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
ஐஎஃப்ஐசி வங்கியின் மக்கள்தொடர்பு அதிகாரி முகமது ஹகிபூர் ரஹ்மான் சார்பில் வழக்கு என்பது தொடரப்பட்டது. இந்த வழக்கு டாக்கா கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஜியாதூர் ரஹ்மான் இந்த வழக்கை விசாரித்து நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி காசோலை மோசடி வழக்கில் ஷாகிப் அல் ஹாசனின் அதற்கு நிகரான சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் ஷாகிப் அல் ஹாசன் சிக்கலில் சிக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications