புதினுக்கு போன் போட்ட டிரம்ப்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி பேசியது என்ன? என்ன நடந்தது?
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று தொலைபேசியில் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் உரையாடினர். இந்த வேளையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர். அப்போது இருநாடுகள் இடையேயான மோதலை அமெரிக்கா தான் முடிவுக்கு கொண்டு வந்தது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடம் தொடர்ந்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இவர்கள் 2 பேரும் ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் வரை பேசினர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனம் TASS வெளியிட்ட செய்தியில், ‛‛மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை தனிப்பட்ட முறையில் தலையீடு செய்து அமெரிக்கா தான் நிறுத்தியது’’ என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனை ரஷ்ய அதிபர் புதினின் உதவியாளர் உஷாகோவ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக மே 7ம் தேதி நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம், விமானப்படை தளம், ராணுவ தளம் அழிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதில் வேறு எந்த நாடுகளும் தலையீடு செய்யவில்லை என்று நம் நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா தான் தலையீடு செய்து தான் மோதலை நிறுத்தியதாக கூறி வருகிறார். இதனை நம் நாடு ஏற்கவில்லை என்றாலும் கூட டிரம்ப் தனது நிலையை மாற்றவில்லை. இப்படியான சூழலில் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ‛‛நான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன். இந்த உரையாடல் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. உக்ரைனால் ரஷ்யாவின் விமானம் தாக்கும் முயற்சி மற்றும் இரு தரப்பினராலும் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள் பற்றி விவாதித்தோம். இது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல.
விமான தளங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதிபர் புதின் மிகத் திட்டவட்டமாக கூறினார். ஈரான் அணு ஆயுதங்கள் தொடர்பான முடிவை எடுப்பதற்கு கால அவகாசம் இல்லை என்பதையும் விவாதித்தோம். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்று நான் அதிபர் புதினிடம் தெரிவித்தேன். அதில் நாங்கள் இருவரும் உடன்பட்டதாக நம்புகிறேன். ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் தான் பங்கேற்க விரும்புவதாகவும், இந்த விஷயத்தை விரைவாக முடிவுக்கு கொண்டுவர உதவ முடியும் என்றும் புதின்கூறினார். ஈரான் இந்த முக்கியமான விஷயத்தில் முடிவெடுப்பதை தாமதப்படுத்துகிறது. எனவே கூடிய விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதன்மூலம் புதின் - டிரம்ப் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் வெறுமனே உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி மட்டுமின்றி அமெரிக்கா -ஈரான் இடையேயான அணுஆயுத ஒப்பந்தம், இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பாகவும் நடத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் ஈரான், இந்தியா ஆகியவை ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications