இரவில் குலுங்கிய நேபாளம்..சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பலமுறை நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. அதாவது கடந்த மாதம் 22 ஆம் தேதி நேபாளத்தில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் பல மாநிலங்கள் அதிர்ந்தன.
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 15 ஆம் தேதியும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், அக்டோபர் 3 ஆம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில்,நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் நேபாளத்தில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் வரவில்லை.
பூமிக்கடியில் டெக்டானிக் தட்டுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் அமைந்து இருப்பதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. இந்த நிலநடுக்கத்துக்கு 8 ஆயிரம் பேர் பலியாகினர்.21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications