ஈரான் அதிபர் ரைசி மரணம்.. இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்! யார் இவர்? என்ன செய்யப் போகிறார்?
டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த நிலையில் அந்நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் (முகம்மது மோக்பர்) (முகமது மோக்பர்) பதவியேற்க உள்ளார். முகமது மொக்பர் தலைமையிலான குழு ஒன்று புதிய அதிபரை தேர்வு செய்ய இருக்கிறது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இப்ராஹிம் ரைசின் மரணம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஈரானின் பரம எதிரிகளான இஸ்ரேல், அமெரிக்காவில் ஒருதரப்பினர் ரைசியின் மரணம் நிம்மதியைத் தருவதாக கூறுகின்றன.

ஈரான் அதிபர் ரைசியின் மரணம் விபத்தால் நிகழ்ந்ததாக இருக்காது; இஸ்ரேலின் உளவுப் படையான மொசாத்தின் சதி வேலையாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவாகவே முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ஈரானின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார். தற்போது ஈரானின் முதலாவது துணை அதிபராக இருப்பவர் முகமது மொக்பர்.
ஈரான் இடைக்கால அதிபர் முகமது மொக்பர் யார்?
- 1955-ம் ஆண்டு பிறந்த முகமது மொக்பர், ஈரானின் மதகுரு கமேனிக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். 2021-ல் இப்ராஹிம் ரைசி, ஈரானின் அதிபரான போது முதல் துணை அதிபரானவர் முகமது மொக்பர்
- ஈரான் நாட்டின் உயரிய முதலீட்டு அமைப்பான செட்டாட் Setad தலைவராகவும் பதவி வகித்தவர். இது ஈரான் புரட்சியின் தந்தை கொமேனி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இமாமின் ஆணையை நிறைவேற்றுகிற ஒரு அமைப்பு என்கிற பொருளைக் கொண்டதுதான் செட்டாட். 1979 புரட்சிக்குப் பின் கைவிடப்பட்ட சொத்துகளை நிர்வகிப்பது, விற்பது, தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்டவைகளையும் செட்டாட் மேற்கொண்டிருந்தது.
- அணு ஆயுத விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் 2010-ல் வெளியிட்ட தடைப் பட்டியலில் முகமது மொக்பர் பெயரும் கூட இடம் பெற்றிருந்தது. பின்னர் முகமது மொக்பர் பெயரை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கிவிட்டது.
- 2013-ல் அமெரிக்கா கருவூலம் தடை விதித்த பட்டியலில் முகமது மொக்பர் தலைமை வகித்த செட்டாட் மற்றும் 37 நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.
- கடந்த ஆண்டு ஈரான் உயர்நிலைக் குழு ஒன்று ரஷ்யா பயணம் மேற்கொண்டது. இந்த பயணத்தின் போது ரஷ்யாவிடம் டிரோன்கள், ஏவுகணைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. ரஷ்யா சென்ற இந்த ஈரானிய குழுவில் முகமது மொக்பரும் இடம் பெற்றிருந்தார்
என்ன செய்யப் போகிறார் முகமது மொக்பர்?
இடைக்கால அதிபர் முகமது மொக்பர், ஈரான் சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே ஆகியோர் அடங்கிய குழு புதிய அதிபர் குறித்து விவாதித்து முடிவெடுக்கும். அடுத்த 50 நாட்களில் ஈரானின் புதிய அதிபரை இந்தக் குழு தேர்வு செய்யும்.
- அதிபர் ரைசியின் மரணம்- விபத்தா? படுகொலையா? என்கிற குழப்பம், இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின் தொடர்ச்சி உள்ளிட்ட நெருக்கடியான நிலையில் முகம்மது மொக்பர் என்ன நிலைப்பாடுகளை எடுப்பார்? அடுத்த அதிபராக முகம்மது மொக்பர் பதவியேற்பாரா? என்கிற கேள்விகளுக்கான விடைகளை ஈரான் மட்டுமல்ல சர்வதேசமும் எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications