பயணிகள் வெளியேறிய அடுத்த நிமிடம் விமானம் வெடித்தது.. எமிரேட்ஸ் பயணி திகில் பேட்டி
துபாய்: துபாய் ஏர்போர்ட் ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்து காயமின்றி தப்பிய பயணி ஒருவர் தனது பயங்கர அனுபவத்தை நிருபர்களிடம் விளக்கினார்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட, போயிங் வகை விமானம் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.

துபாய் நேரப்படி மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.
விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்தது.
இந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த சாய் பாஸ்கர், நிருபர்களிடம் அந்த பயங்கர அனுபவத்தை இப்படி கூறினார்: விமானத்தின் முன்பக்க சக்கரம் உடைந்ததும் விமானம் கிடுகிடுவென ஆடியது. இதனால் பயணிகள் பீதியில் கத்தினோம்.
விமானம் நின்றதும், உடனடியாக, எமெர்ஜென்சி எக்சிட் வழிகள் வழியாக, தப்பி குதித்து வெளியே ஓடினோம். நான்தான் அனேகமாக கடைசியாக வெளியேறிய பயணியாக இருக்க முடியும். எனக்கு பின்னால், இரண்டு விமான ஊழியர்கள்தான் வெளியேற காத்திருந்தனர்.
நாங்கள் வெளியேறி ஒரு நிமிடத்திற்குள், விமானத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதன்பிறகு புகை மண்டலம் அதிகரித்தது. நல்ல வேளையாக ஒரு நிமிட இடைவெளியில் நாங்கள் உயிர் தப்பினோம்.
அதேநேரம், புகை மூட்டம் காரணமாக, சில பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆனால் சிறு காயம் இன்றி, அதிசயிக்கத்தக்க வகையில் தப்பிவிட்டோம்.
விமானத்தில் விபத்து ஏற்பட்ட உடன், விமான ஊழியர்கள் தரப்பில் இருந்து, பயணிகள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று கூட அறிவிக்கவில்லை. உதவிக்கும் வரவில்லை. நாங்களாகத்தான் எங்கள் உயிரை காப்பாற்றி தப்பியோடினோம். இவ்வாறு சாய் பாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications