முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? இந்தியாவிடம் ஹெல்ப் கேட்கும் புதின்.. திடீர் மனமாற்றம் ஏன்!
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார். உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம் போர் தொடங்கிய நிலையில், அது ஆண்டுக் கணக்கில் நீடித்து வருகிறது. போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கின.

இருப்பினும், ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து மறுத்தே வந்தது. இதற்கிடையே திடீரென ரஷ்ய அதிபர் புதின் தனது டோனை மாற்றி இருக்கிறார்.
மனமாற்றம்: ஆண்டுக் கணக்கில் போர் தொடரும் நிலையில், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளார். இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில், புதினின் இந்த மனமாற்றம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்குப் பொருளாதார மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அங்கே புதின் பேசுகையில், "ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022இல் போடப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்க வேண்டும்" என்றார்.
என்ன ஒப்பந்தம்: உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த போது, ரஷ்யா கை ஓங்கி இருந்தது. அப்போது இஸ்தான்புல் நகரில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தத்திற்கு முதற்கட்ட சம்மதம் தெரிவித்தது. இருப்பினும், அது கடைசி வரை நடைமுறைக்கு வரவே இல்லை. மேலும், அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் பாயிண்டுகளும் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் அந்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு புதின் பேசியுள்ளார்.
வேறு என்ன சொன்னார்: புதின் இது தொடர்பாக மேலும் பேசுகையில், "அப்போது எங்களால் உடன்பாட்டை எட்ட முடிந்தது. அந்த ஆவணத்தில் உக்ரைன் தூதுக்குழு தலைவரின் கையெப்பம் கூட இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடைந்தே அவர்கள் கையெழுத்திட்டனர். எங்களுக்கு அதில் உடன்பாடு இருந்தது.
ஆனால், அதை ஒப்புக் கொள்ள திடீரென உக்ரைன் மறுத்துவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவிடம் தோற்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே உக்ரைனை அந்த நாடுகள் தொடர்ந்து போரில் தள்ளின. இப்போதும் போர் நிறுத்தம் குறித்து பேச தயாராகவே உள்ளோம். இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வைக்கலாம் " என்றார்.
பிரதமர் மோடி: இத்தனை காலம் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வந்த புதின், திடீரென உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி சமீபத்தில் தான் ரஷ்யாவுக்குச் சென்று புதினை சந்தித்திருந்தார். அதேபோல உக்ரைனுக்கு சென்று ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து இரு தலைவர்களையும் சந்தித்த நிலையில், புதினும் இந்தியா மத்தியஸ்தம் செய்து வைக்கலாம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டு பிப். மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் தொடங்கிய நிலையில், இந்தியா அதில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. அதேநேரம் இந்த போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்து வந்தார். சமீபத்தில் கீவ் நகருக்குச் சென்ற போதும் போரின் மத்தியஸ்தம் செய்து வைக்க இந்தியா தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும், பிரச்சினைகளைப் போர் மூலம் தீர்க்க முடியாது என்றும் இது போரின் சகாப்தம் அல்ல என்றும் பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
மனமாற்றம் ஏன்: பல ஆண்டுகளாக போர் தொடரும் நிலையில், ரஷ்யா மீது பல உலக நாடுகள் பொருளாதார தடை போட்டுள்ளன. இதனால் ரஷ்யா பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் நாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ரஷ்யாவால் ஊடுருவி சென்று தாக்குதல் நடத்த முடியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டே புதின் போர் நிறுத்த முடிவுக்கு ஓகே சொல்லி இருப்பார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications