லஞ்சம் வாங்கிய சீன அமைச்சருக்கு மரண தண்டனை.. மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு
பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம் மற்றும் ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படித் தான் சீனாவைச் சேர்ந்த மாஜி விவசாயத் துறை அமைச்சர் டாக் ஜென்ஜியன் என்பவர் மீது கடந்தாண்டு லஞ்சம் வாங்கிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாடுகளிலும் லஞ்சம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்தியாவிலும் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ற விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே நமது அண்டை நாடான சீனாவில் லஞ்சம் வாங்கியதற்காக மாஜி அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை
சீனாவின் முன்னாள் விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரத்துறை அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு தான் லஞ்சம் வாங்கியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாண நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
டாங் ரென்ஜியன் கடந்த 2007 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சீன அரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அப்போது சில குறிப்பிட்ட திட்டங்களைச் செய்து கொடுக்க அவர் ரொக்கம் மற்றும் சொத்துக்களாக லஞ்சம் பெற்றதாகப் புகார்கள் உள்ளன. இப்படி அவர் 268 மில்லியன் யுவான் (சுமார் 333 கோடி ரூபாய்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நிறுத்தி வைப்பு
இந்த விவகாரத்தில் அவரை கைது செய்து சீன போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் டாக் ஜென்ஜியன் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு சாங்சுன் மக்கள் நீதிமன்றம் மரணத் தண்டை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதால், மரண தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு அமைப்பின் விசாரணையில் சிக்கி டாங், தனது பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, 2024 நவம்பரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். டாங் மீது மிகத் தீவிரமான லஞ்ச புகார்கள் எழுந்த நிலையில், விசாரணையும் மின்னல் வேகத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் விசாரணை முடிந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துகள் பறிமுதல்
டாங் லஞ்சம் வாங்கிய தொகை மட்டுமின்றி, அவரது அனைத்துச் சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசிய கருவூலத்தில் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த டாங் 2017 முதல் 2020 வரை சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவின் ஆளுநராகப் பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரத்துறை அமைச்சராக டாக் இருந்தார். அப்போது தான் அவர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க சில குறிப்பிட்ட நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியிருக்கிறார்.
சீன அரசு
இவர் மட்டுமின்றி மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள் லி ஷாங்பூ மற்றும் வெய் ஃபெங்ஹே மீதான உள்ளிட்டோர் மீதும் இதுபோல ஊழல் புகார் குறித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சீன அதிபரான ஜி ஜின்பிங், கடந்த 2020இல் ஊழல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லி மிகத் தீவிரமான நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் என பலரும் சிக்கினர். அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications