தடுமாறி விழும் டாலர்! 'பிரிக்ஸ்' வரிசையில் இணையும் மேற்கு ஆப்பிரிக்கா.. அமெரிக்காவுக்கு ஷாக்
மாஸ்கோ: பிரிக்கஸ் நாடுகள் அமெரிக்காவின் டாலரை கைவிட்டு சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது ஆப்பிரிக்காவும் இணைந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களில் ஏறத்தாழ 30 சதவிகிதத்தை ஆப்பிரிக்கா கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்நாட்டிலிருந்து வறுமை இன்னும் தீரவில்லை. எந்த பக்கம் பார்த்தாலும் எலும்பும் தோலுமாய் இருக்கும் குழந்தைகளும், ஓட்டை குடிசைகளும்தான் ஆப்பிரிக்காவின் அடையாளமாக இருக்கிறது. இதனை மாற்றுவதாக கூறி கடன் வழங்கிய அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த கடனை வைத்து ஆப்பிரிக்க நாடுகளின் அரசாங்கங்களில் தலையிட்டு இயற்கை வளங்களை சுரண்ட தொடங்கின.

இதனால்தான் ஆப்பிரிக்கா கடுமையான பஞ்சத்தில் இன்னமும் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில்தான் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் ஆகியவற்றில் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக புர்கினோ பசோ மற்றம் நைஜர் நாடுகளில் இந்த கிளர்ச்சியையடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான ராஜ்ய உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதை துணிச்சலான நடவடிக்கை என்றே சொல்லலாம். இந்தியா போன்ற பெரிய நாடுகளே அமெரிக்காவுக்கு எதிராக பேச தயங்கும் நிலையில், இந்த சிறிய நாடுகள் பேசியிருப்பது சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த ராஜ்ய உறவை துண்டித்த அதே கையோடு ரஷ்யாவுடன் தங்களது உறவை ஆப்பிரிக்க நாடுகள் பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ரஷ்ய அதிபர் புதினும் இதனை வரவேற்றிருக்கிறார். மொத்தமுள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளில் 49 நாடுகள் ரஷ்யாவுடன் சேர்ந்து 181 அம்சங்கள் கொண்ட செயல்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி இதற்கு முன்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரஷ்யா வழங்கிய ரூ.1.9 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான அளவுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் புதின் அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உக்ரைனிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய 3.28 கோடி டன் உணவு தானியத்தில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே ஆப்பிரிக்கவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது. மற்ற தானியங்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஆப்பிரிக்க நாடுகள் தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற இந்த நிவாரண உதவி கைகொடுக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது. இது எல்லாவற்றையும் விட முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகம் அந்தந்த நாடுகளின் சொந்த நாணயங்களிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவுடனான ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் இந்திய நாணயங்களில்தான் நடக்கிறது. பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன.
இந்த கூட்டணியில் தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் கைகோர்த்திருக்கின்றன. இதனால் ஆசிய நிலப்பரப்பிலிருந்து டாலர் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. இதை கவனித்து வரும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், இனி வரும் காலத்தில் ஆசியாதான் உலக நாடுகளின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்றும், இதற்கு சீனாவும் ரஷ்யாவும் முன்னணியாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications