தண்டனையை நிறுத்திய கோர்ட்! வெளியே வருவதற்குள் இம்ரான் கான் மீண்டும் அதிரடி கைது! பரபர பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோக்ஷகானா வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவர் விடுதலையான நிலையில் மற்றொரு வழக்கில் உடனடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவரது தலைமயில் தான் அந்த அணி 50 ஓவர் உலககோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் கூட்டணி ஆட்சியை அமைத்து பிரதமராக பொறுப்பேற்றார். இதற்கிடையே தான் அவருக்கு ஆதரவு அளித்த கட்சியினர் அதனை வாபஸ் பெற்றனர். இதையடுத்து கடந்த ஆண்டு இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் பிரதமர் பதவியை இழந்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். தற்போது அங்கு பதவிக்காலம் முடியும் 2 நாட்களுக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே தான் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தது முதல் அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல் உள்பட பல வழக்குகள் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக கூறப்படும் வழக்கில் இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து இம்ரான் கான் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது இம்ரான் கானுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இம்ரான் கானின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். இம்ரான் கான் சிறையில் இருந்து வெளியே வருவதோடு, தண்டனை நிறுத்தி வைப்பால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதால் கட்சியினர் உற்சாகமாகினர். ஆனால் இந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் கருவூல ஊழல் வழக்கில் இம்ரான் கானின் 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அவர் இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அதாவது இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது முக்கிய மீட்டிங், அரசு உயரதிகாரிகளுடன் பேசும் சைபர் (Cypher) கேபிள் சேவையை தனது சொந்த கட்சி மாநாட்டில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து ரிலீஸ் ஆகவில்லை. மாறாக சிறையிலேயே இருக்கிறார். நாளை காலை அவர் சைபர் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
மேலும் இன்னும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இம்ரான் கானின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழக்காக இந்த சைபர் வழக்கு உள்ளது. அதாவது கருவூல ஊழல் வழக்கு என்பது இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை மட்டுமே வழங்கியது. ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள சைபர் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இம்ரான் கானின் எதிர்க்காலத்தை நிர்ணயிக்கும் வழக்காக சைபர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என இம்ரான் கானின் கட்சியினர் கூறியுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications