சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த 92 வயதான நாதன், தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
நாதன் சிங்கப்பூர் அரசில் பல உயரிய பதவிகளை வகித்தவர். கடந்த 1988-ஆம் ஆண்டு மலேசியாவுக்கான உயர் ஆணையராகவும், 1996-இல் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார்.
அதன்பிறகு, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருமுறை பதவி வகித்தவர். சிங்கப்பூர் அதிபராக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார். அவருக்கு பிறகு, டோனி டான் கெங் யாம் அதிபராக பதவியேற்றார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் "பிரவாசி பாரதிய சம்மான்' விருது கடந்த 2012-ஆம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications