உக்ரைன் விவகாரம்.... ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடை: ஜி7 நாடுகள் எச்சரிக்கை
நியூயார்க்: உக்ரைனில் கிளர்ச்சியாளர்களை தொடர்ந்தும் ஆதரித்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொள்ள நேரிடும் என்று ஜி 7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகள் இணைந்த கூட்டமைப்புதான் ஜி 7. இந்த கூட்டமைப்பின் சார்பில் நியூயார்க்கில் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
உக்ரைனின் கிரீமியா பிராந்தியத்தை சட்டத்துக்குப் புறம்பாக தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கும், உக்ரைனின் கிழக்குப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்கும் ரஷ்யாவுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமின்றி, சர்வதேசச் சட்டங்களை மீறிய செயலாகும். உக்ரைனில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் ரஷ்யாவுக்கு உள்ளன.
அதனை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு சாத்தியமுள்ளது. அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தொடர்ந்து உக்ரைனுக்குப் பாதகமான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கவும் தயாராக இருக்கிறோம்
இவ்வாறு ஜி 7 நாடுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications