ஆயுசு கெட்டி… 1000 மீட்டர் ஆழ குகையில் விழுந்த ஆராய்ச்சியாளர்: 11 நாட்களுக்கு பின் மீட்பு
பெர்லின்: ஜெர்மனியில் 1000 மீட்டர் ஆழ குகையில் தவறி விழுந்த ஆராய்ச்சியாளர் 11 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஜெர்மனியை சேர்ந்தவர் ஜோகன் வெஸ்தயூசர் (52). ஆராய்ச்சியாளரான இவர் ஜெர்மனியில் ஆஸ்திரியா எல்லையில் ஆல்ப்ஸ் மலையில் உள்ள 1000 மீட்டர் ஆழ குகை குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

அவருடன் மேலும் 2 ஆராய்ச்சி நிபுணர்கள் இருந்தனர். அப்போது, வெஸ்தயூசர் அந்த குகைக்குள் தவறி விழுந்தார். அதில் அவரது தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த 8ஆம் தேதி நடந்தது.
728 பேர் பங்கேற்பு
இது பற்றிய தகவல் அறிந்ததும் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, குரேஷியா உள்ளிட்ட பலநாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். சுமார் 180 மீட்டர் செங்குத்தான பாறைகளால் ஆன பவேரியன் ஆல்ப்ஸ் மலை குகைக்குள் இறங்கி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணியில் 728 பேர் பங்கேற்றனர்.
11 நாட்கள் போராட்டம்
இந்த நிலையில் குகைக்குள் விழுந்த 11 நாட்கள் கழித்து நேற்று அவரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். முன்னதாக குகைக்கு வெளியே ஆஸ்திரியா எல்லையில் ஹெலிகாப்டர் மற்றும் அவசர பிரிவு மருத்துவ குழு உள்ளிட்டோர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆல்ப்ஸ் மலைக் குகை
படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜோகன் வெஸ்தயூசர் தவறி விழுந்த குகை பவேரியன் ஆல்ப்ஸ் மலையில் படுபயங்கர ஆழமான பகுதியாகும்.
ஜில் ஜில் நீர்வீழ்ச்சி
இதற்கு அடியில் ஏரிகளும், அதில் விழும் ‘ஜில்'லென்ற நீர்வீழ்ச்சிகளும் ஆபத்து நிறைந்தவை. அப்படிப்பட்ட பகுதியில் இருந்து அவரை மீட்ட குழுவினரை ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆயுசு கெட்டி
ஆராய்ச்சியாளரின் ஆயுசு கெட்டி என்பதால் ஆயிரம் அடி குழியில் விழுந்தும் உயிரோடு மீண்டுள்ளார் என்கின்றனர் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள்.


Click it and Unblock the Notifications
