ஊசலாடுதே உயிர்கள்.. 1200 அடி அந்தரத்தில் தொங்கும் 6 குழந்தைகள்.. கயிறு அறுந்துடுச்சு.. கதறும் மக்கள்
இஸ்லாமாபாத்: அந்த 6 குழந்தைகளையும் எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று இணையவாசிகள் கதறி கேட்டுக்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா என்ற பிராந்தியம்... இது ஒரு மலைப்பிரதேசமாகும். சுற்றிலும் மலைகள், அதற்குள் ஆழமான பள்ளத்தாக்குகள், ஆங்காங்கே நதிகள், அத்துடன் சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாலங்கள்: ஆனால், இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க வேண்டுமானால் அதற்கு முறையான சாலை வசதிகள் இல்லை.. இதற்கென பிரத்யேகமான பாலங்களும் அமைக்க முடியாதபடி, இயற்கை சூழல் அமைந்துள்ளது.

அதனால், ஒரு மலையிலிருந்து, எதிரே உள்ள இன்னொரு மலைக்கு போக வேண்டுமானால், கேபிள் கார்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.. நம்முடைய பழனி மலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரோப் கார்கள் போலவே இது செயல்படுகிறது.
கேபிள் வாகனங்கள்: இந்த கேபிள் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு வாகனத்தில் உட்கார்ந்து, ஆபத்தான மலைப்பகுதியை தாண்ட வேண்டி உள்ளது. அதைவிட முக்கியம், குழந்தைகள் ஸ்கூலுக்கு போக வேண்டுமானாலும்கூட, இந்த கேபிள் கார் மூலமாகவே, மலைப்பகுதியை கடந்து செல்ல வேண்டுமாம்.
அப்படித்தான் இன்று காலை 7 மணிக்கு, 6 குழந்தைகள் வழக்கம்போல் ஸ்கூலுக்கு கிளம்பி வந்தார்கள்.. 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் அந்த சிறு வாகனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.. கேபிள் காரும் அங்கிருந்து நகர தொடங்கியது.. தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே கேபிள்கார் சென்றபோது, திடீரென கயிறு அறுந்துவிட்டது.. இதனால், அந்த கார், 8 பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட ஆரம்பித்தது.
ரோப் கார்கள்: உடனே ரோப் காரில் பயணம் செய்த ஒருவர் செல்போன் மூலமாக நிலவரத்தை சொன்னார்.. "காப்பாத்துங்க காப்பாத்துங்க, 5 மணி நேரமாக அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறோம்.. 8 பேர் இருக்கிறோம். அதில் ஒருத்தர் மயக்கமாகிவிட்டார்.. ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பி சென்று விட்டது" என்று கதறினார்.
ஆனால், 1200 அடி உயரத்தில் தொங்குவதால், ஹெலிகாப்டர் உதவியால்தான் மீட்பு நடவடிக்கையை செயல்படுத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்கிறார்களே தவிர, பயணிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையாம்.. 6 குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளதால், இணையவாசிகள் பதறிப்போய் உள்ளனர்.. எப்படியாவது அவர்கள் 8 பேரையும் காப்பாற்றுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தபடியே இருக்கிறார்கள்.
அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் எல்லாருமே 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாம்.. இந்த தகவல் வெளியானதையடுத்து பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள்: இதனிடையே, பலத்த காற்று வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாகவும், சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த பகுதி எப்போதுமே ஆபத்தானதுதானாம். போக்குவரத்து வசதிகளும் முறையாக இல்லை என்பதால், தினமும் சுமார் 150 பேர் கேபிள் கார் மூலம் பள்ளிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாக வருத்தத்துடன் சொல்கிறார்கள் ஒரு பள்ளி ஆசிரியர்.













Click it and Unblock the Notifications