இந்தியா வார்னிங்கிற்கு நடுவே.. வங்கதேசத்தில் இந்து தலைவருக்கு நேர்ந்த கொடூரம்.. கொலை - பதற்றம்
டாக்கா: வங்கதேசத்தில் வீடு புகுந்து கடத்தி இந்து அமைப்பை சேர்ந்த தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் மீதான அடக்குமுறைகள் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

இவர் பொறுப்பேற்றது முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது அடக்குமுறைகள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு வலியுறுத்தியும் கூட இடைக்கால அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வீடு புகுந்து இந்து அமைப்பினர் தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இறந்த தலைவரின் பெயர் பாபஷ் சந்திரா ராய். அவருக்கு வயது 58. இவர் பூஜா உத்ஜபன் பரிஷத் என்ற அமைப்பின் பீரல் பகுதி துணை தலைவராக செயல்பட்டு வந்தார். மேலும் அந்த பகுதியில் அறியப்படும் இந்து தலைவராக இருந்தார்.
பாபஷ் சந்திராய் வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 330 கிலோமீட்டர் தொலைவில் தினாஜ்பூர் அருகே தாசுதிபூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் சாந்தனா. நேற்று மாலையில் சாந்தனாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ‛வீட்டில் பாபேஷ் சந்திர ராய் இருக்கிறாரா?'' என்று கேட்டார். அதற்கு அவர் ‛‛இருக்கிறார்'' என்று கூறிவிட்டு ‛‛நீங்கள் யார்?'' என்று பதில் கேள்வி கேட்டார். ஆனால் அதற்குள் செல்போன் இணைப்பை எதிர்முனையில் பேசியவர் கட் செய்தார்.
அதன்பிறகு அரைமணிநேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திபுதிபுவென வீட்டுக்குள் நுழைந்து பபேஷ் சந்திரராயை தாக்கி கடத்தி சென்றனர். அதன்பிறகு நாரபாரி கிராமத்தில் வைத்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். இதில் பாபேஷ் சந்திரராய் படுகாயமடைந்தார். ரத்தம் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ரத்த காயத்துடன் வீட்டுக்கு வந்த அவரை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே பாபேஷ் சந்திரராய் மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீரல் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்று பீரல் போலீஸ் நிலையத்தில் பொறுப்பாளர் அப்துஸ் சாபூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிடாபாத்தில் வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. தந்தை - மகன் உள்பட 3 பேர் இறந்தனர். இந்த வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து எல்லை தாண்டி மேற்குவங்கத்துக்குள் ஊடுருவிய கும்பல் தான் காரணம் என்று உளவுத்துறை கண்டறிந்தது. இதனை மத்திய அரசும் வெளிப்படையாக தெரிவித்தது. இதனை வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் விமர்சனம் செய்து இருந்தார்.
இதுபற்றி முகமது யூனுஸ், ‛‛இந்தியாவின் மேற்கு வங்கத்தில் முர்சிதாபாத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் தங்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்திய விவகாரங்கள் பற்றி அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்பை மத்திய அரசு பதிவு செய்தது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‛‛வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படும் நிலையில் இந்தியா தனது கவலையை கூறியிருந்தது. அதற்கு இணையாக வங்கதேசம் இந்த ஒரு விஷயத்தை எடுத்து வைத்துள்ளது. வங்கதேசத்தில் வன்முறையாளர்கள் சுதந்திரமாக வலம் வருகின்றனர். இந்தியாவில் அப்படியான சூழல் இல்லை. வங்க தேசம் தனது எல்லையை புரிந்து செயல்பட வேண்டும். மேற்கு வந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக இது ஒரு கபட நாடகம்'' என விளாசியிருந்தார்.
வங்கதேசத்தை எடுத்த கொண்டால் இஸ்கான் உள்பட பல இந்து அமைப்புகளில் மக்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இந்த கொலை நடந்துள்ளது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications