அதிகார துஷ்பிரயோகம்: ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடர அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
வாஷிங்டன்: காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக வழக்கு தொடர பிரிதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதிபர் ஒபாமாவின் கனவுத் திட்டமான ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு பாலிசி அக்டோபரில் அறிமுகமானது. புதிய காப்பீடு திட்டம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவேற்பு இல்லை
நாட்டின் பெரும்பான்மையான மக்கள், ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையவில்லை. இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய மருத்துவக் காப்பீடுகள் காலாவதியாவதாக அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. இதன்காரணமாக அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கு தொடர முடிவு
இந்நிலையில், ஒபாமா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு தொடுக்க குடியரசு கட்சி திட்டமிட்டுள்ளது. அதிபர் மீது வழக்கு தொடர அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர் ஒப்புதல் தேவை. எனவே பிரதிநிதிகள் சபையில் இந்த விவகாரத்தை வாக்கெடுப்புக்கு விட வேண்டியது அவசியம்.

சட்ட வல்லுநர்கள் சம்மதம்
வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு இது தகுதியான பிரச்சினைதானா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் விதிமுறை கமிட்டியிடம் அளிக்கப்பட்டது. அதிலுள்ள சட்ட வல்லுநர்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த இது தகுதியான பிரச்சினைதான் என்று கடந்த வாரம் அறிவித்தனர்.

வாக்கெடுப்பு
இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் இந்திய நேரப்படி இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 201 உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு எதிராக வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பில், ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் முற்றாக எதிர்த்தும் கூட, ஒபாமாவுக்கு எதிரான மசோதா வெற்றி பெற்றுள்ளது. வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், குடியரசுக் கட்சியினர் அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications