மோடி அரசு அதிரடி! உலகின் காஸ்ட்லியான கோஹினூர் வைரத்தை.. இந்தியா கொண்டு வர முயற்சி! பரபர ஆக்ஷன்
லண்டன்: சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா தொடங்க உள்ளது.
கடந்தாண்டு ராணி எலிசபெத் வயது மூப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னரானார். அவரது முடிசூட்டு விழா இம்மாத தொடக்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதேபோல அவரது மனைவி கமீலா பிரிட்டன் மகாராணியாக முடிசூட்டப்பட்டார். லண்டனில் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் உலகெங்கும் இருந்தும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு முறையும் அங்கே இதுபோன்ற அரச குடும்ப விழாக்கள் நடக்கும் போதெல்லாம் அவர்களிடம் இருக்கும் பிற நாடுகளின் பொருட்கள் குறித்த விவாதமும் எழும். அதேபோல இந்த முறையும் எழுந்துள்ளது. இந்திய மன்னரிடம் இருந்து பெறப்பட்ட கோஹினூர் வைரம் உட்பட அனைத்தையும் அந்தந்த நாடுகளிடம் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட, பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்களையும், அரச குடும்பத்தின் வசம் உள்ள பொருட்களையும் திரும்பப் பெறும் முயற்சியை இந்தியா எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு இறுதியில் இதற்கான பணிகளைத் தொடங்க உள்ளனர்.
பிரிட்டன்: இதற்காகப் பிரிட்டனிடம் இருக்கும் இந்தியாவுக்குச் சொந்தமான பொருட்கள் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இது சர்வதேச அளவில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் மத்திய அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் இது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை இந்தியத் தொல்லியல் துறை தனியாக முன்னெடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், காலனித்துவ ஆட்சியின் போது எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெறும் முயற்சியையே இப்போது மத்திய அரசும் எடுக்க உள்ளது.
முதலில் சிறிய அருங்காட்சியகங்கள், தனி கலைப் பொருட்களைச் சேகரிப்போர், தானாக முன்வந்து இந்தியக் கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளவர்களிடம் இருந்து பொருட்களைப் பெறத் திட்டமிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பெரிய நிறுவனங்கள், ராயல் சேகரிப்புகளிடம் இருந்து திரும்பப் பெறும் முயற்சியை எடுக்க உள்ளனர்.
கலைப்பொருட்கள்: இங்கிலாந்தில் இருக்கும் இந்தியாவின் கலைப்பொருட்களைத் திரும்பப் பெறுவது முக்கியமான ஒன்றாக இருப்பதாக யூனியன் கலாச்சார செயலாளர் கோவிந்த் மோகன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்திற்குத் தனிப்பட்ட முறையில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, தென்னிந்திய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்கலச் சிலை தொடர்பாக ஆக்ஸ்போர்டின் அஷ்மோலியன் அருங்காட்சியகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காலனித்துவ ஆட்சியில் நம்மிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட இந்திய நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் திரும்பப் பெறப்படுவது தவிர்க்க முடியாதது என்றே எழுத்தாளர் சத்னம் சங்கேரா தெரிவித்துள்ளார்.
பல பில்லியன்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பிரிட்டன் அருங்காட்சியகங்கள் மற்றும் அரச குடும்பத்திடம் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்தியக் கலைப் பொருட்கள் உள்ளன. இது காலனித்துவ ஆட்சியின் பகுதியாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் மியான்மரின் சில பகுதிகள் இணைக்கப்பட்ட போது, அங்கே இருந்து கலைப் பொருட்களைப் பிரிட்டன் வீரர்கள் கொள்ளையடித்து விற்ற சம்பவங்களும் நடந்தது. இழந்த கலைப் பொருட்களை மீட்கும் வரை எந்த நாடும் அமைதியாக இருக்காது" என்றார்.

கோஹினூர் அதாவது பாரசீக மொழியில் ஒளியின் மலை என்றும் அழைக்கப்படும் இது உலகின் மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த வாரம் முதலே அதுவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 105 காரட் வைரம் மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது. அதன் பிறகு அது விக்டோரியா மகாராணி கைவசம் சென்றது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து, இதுவரை 251 கலைப்பொருட்கள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் 238 பொருட்கள் 2014க்கு பின் திரும்பப் பெறப்பட்டவை என்று தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 100 கலைப்பொருட்களும் திருப்பி பெறப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications