மொத்த இந்தியாவும் முடங்கும்.. இஸ்ரேல் - ஈரான் போரால் புது பிரச்சனை! ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த போரின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராகி வருகிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் நம் நாடு பெரிய அளவில் பாதிக்கப்படும். மேலும் பெட்ரோல், டீசல் முதல் அனைத்து பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரிக்கும். இது ஏன்? இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு நடுவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் எப்படி இந்தியாவை பாதிக்கும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது போராக மாறிவிட்டது. மத்திய கிழக்கில் தானே போர் நடக்கிறது. இஸ்ரேல் - ஈரான் மோதிக்கொள்வதால் நம் நாட்டுக்கு என்ன பிரச்சனை? என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவுக்கு பெரிய பிரச்சனை உள்ளது.

இதற்கு முக்கிய கரணம் ஈரான் வசம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி தான். ஆங்கிலத்தில் Strait of Hormuz என்பார்கள். இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது முக்கிய நீர்வழிப்பாதையாகும். மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை இணைக்கும் நீர்வழித்தடமாக உள்ளது.
குறிப்பாக அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவை இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கு வரும். தற்போது இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்கா தலையிடும் பட்சத்தில் இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள குறுகலான நீர்வழிப்பாதையாக உள்ளது. மொத்தம் 21 மைல்கள் அதாவது 34 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இதன் வடக்கே ஈரானும், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா, அரபி கடலுடன் இணைக்கும் பகுதியாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது.
இதுதான் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனை சுற்றி சில முக்கிய துறைமுகங்கள் உள்ளன. ஈரானில் பந்தர் அப்பாஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்த புஜைரா, ஓமனின் சோஹர் துறைமுகம், கத்தாரின் ராஸ் லஃபான் துறைமுகங்கள் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமைந்துள்ளது.
இதில் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் என்பது ஈரானின் கடற்படை தளமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மும்பை, ரஷ்யாவின் மாஸ்கோ பன்னாட்டு வழித்தடத்தில் இது அமைந்துள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்தமான புஜைரா துறைமுகம் எண்ணெய் டேங்கர் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஓமனின் சோஹர் துறைமுகம் துபாய் - மஸ்கட் இடையே உள்ளது. கத்தாரின் ராஸ் லஃபான் உள்ளிட்ட துறைமுகம் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் தான் இந்த ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கிய இடமாக உள்ளது.
இப்போது இது எப்படி நம் நாட்டை பாதிக்கும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். மே மாத நிலவரப்படி நாள் ஒன்றுக்கு என்று பார்த்தால் 51 லட்சம் பீப்பாய் கச்சாய் எண்ணெயை நம் நாடு இறக்குமதி செய்தது. இந்த கச்சா எண்ணெய்கள் 40 நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வந்தது. இதில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் இருந்து 19 லட்சம் பீப்பாய், ஈராக்கிடம் இருந்து 12 லட்சம் பீப்பாய், சவுதியிடம் இருந்து 6.15 லட்சம் பீப்பாய், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து 4,90,000 பீப்பாய்,அமெரிக்காவிடம் இருந்து 2.80 லட்சம் பீப்பாய் பெறப்பட்டது.
இதுதவிர குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் நமக்கு கச்சா எண்ணெய் வருகிறது. மேலும் மே மாதத்தில் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 47 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து நமக்கு வரும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வராது. இதனால் அங்கிருந்து இறக்குமதி செய்வதில் பாதிப்பு இருக்காது. மாறாக ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வரும் கச்சா எண்ணெயில் பாதிப்பு ஏற்படும்.
அதேபோல் ஆசிய சந்தைகளுக்கான கச்சா எண்ணெயில் 83 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியா தான் வருகிறது. இதனால் ஈரான் இந்த ஹர்முஸ் ஜலசந்தியை மூடினால் அது நேரடியாக இந்தியாவை பாதிக்கும். ஈரானில் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்காமல் இருந்தாலும் கூட ஹர்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாடுகளிடம் இருந்து நமக்கு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும். இதனால் பெட்ரோல், டீசல் விலை எகிறும். அதன் விலை அதிகரிக்கும்போது நேரடியாக நம் நாட்டின் பிற பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரிக்கும். ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஹர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கைவைத்தால்அது நம் நாட்டுக்கு பெரிய பிரச்சனையாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications