எல் மென்சோ தலைக்கு ரூ.136 கோடி! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மெக்சிகோ ராணுவம்.. என்ன நடந்தது!
மெக்சிகோ சிட்டி: உலகில் மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவராக அறியப்படும் எல் மென்சோ கொல்லப்பட்டுள்ளார். இது மெக்சிகோ நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எல் மென்சோ எப்படிக் கொல்லப்பட்டார்.. அவரை காலி செய்ய மெக்சிகோ அரசு போட்ட திட்டம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான நெமெசியோ ஒசெகுவேரா ரூபன் செர்வான்டெஸ் கொல்லப்பட்டுள்ளார். எல் மென்சோ என்று அழைக்கப்படும் இவரை மெக்சிகோ பாதுகாப்புப் படை கொன்றுள்ளது. இதனை மெக்சிகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மெக்சிகோ கேங்
Jalisco New Generation Cartel என்ற போதைப் பொருள் கும்பலின் தலைவரான இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மெக்சிகோ நாட்டில் மிகவும் தேடப்படும் ஒரு நபராக அறியப்படுகிறார். அமெரிக்கா இவரது தலைக்கு 15 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.136 கோடியைச் சன்மானமாக அறிவித்திருந்தது. அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ளது. இதற்கிடையே அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது
எல் மென்சோவின் கார்ட்டல் அமைந்துள்ள மேற்குக் கடற்கரை மாகாணமான ஜாலிஸ்கோவில் உள்ள டபால்பா நகரில் அவர் பிடிக்கப்பட்டார். சுமார் 20,000 மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், அவரை பிடிக்க மெக்சிகோ ராணுவம் களமிறங்கியது. வீரர்கள் நடத்திய தாக்குதலில் எல் மென்சோ படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சைக்காகத் தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு விமானம் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ ராணுவம்
மெக்சிகோ ராணுவம் மேலும் கூறுகையில் "இந்த ஆபரேஷனில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதற்குத் தக்கப் பதிலடி தரப்பட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஒசெகுவேரா செர்வான்டெஸ் உட்பட மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இருப்பினும், அவர்களும் பின்னர் உயிரிழந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், கவச வாகனங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் ஆயுதப்படை வீரர்கள் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'எல் மென்சோ' பல ஆண்டுகளாகவே மெக்சிகோ போலீஸ் வசம் பிடிபடாமல் தப்பி வந்தார். ஜாலிஸ்கோ மாகாணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். இதனால் உள்ளூர் போலீசார் அவர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. மேலும், அவருடைய அடியாட்களும் அவரை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அடியாட்கள்
இப்படித் தான் 2015 மே மாதத்தில், மெக்சிகோ படைகள் அவரை நெருங்கியது. அப்போது அவரது அடியாட்கள், ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தினர். அடுத்த படைகள் வருவதற்குள் அப்போது எல் மென்சோ எஸ்கேப் ஆனார். இந்த முறை அப்படி எதுவும் நடக்காமல் பிளான் போட்டு கச்சிதமாக அவரை தூக்கியுள்ளது மெக்சிகோ! இது மெக்சிகோவுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த ஆபரேஷனில் எல் மென்சோ எங்கு இருக்கிறார்... அவருடன் எத்தனை பேர் பாதுகாப்பிற்கு இருக்கிறார்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை அமெரிக்கா உளவுத்துறை மெக்சிகோவுக்கு வழங்கியுள்ளது. இருப்பினும், இது ஒரு மெக்சிகோ ஆபரேஷன் என்றும், இதில் அமெரிக்கப் படைகள் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரம்
ஜாலிஸ்கோ கார்ட்டல் போலீஸ், ராணுவம் என யாராக இருந்தாலும் தாக்குதல் நடத்துவார்கள். இது மெக்சிகோவில் இயங்கி வந்த மிகவும் ஆக்ரோஷமான கார்ட்டல்களில் ஒன்றாகும். ட்ரோன்களிலிருந்து வெடிபொருட்களை ஏவுவதிலும், சுரங்கங்களை அமைப்பதிலும் இந்த கேங் கை தேர்ந்தவர்கள். கடந்த 2020ல் மெக்சிகோ சிட்டியின் இதயப் பகுதியிலேயே போலீஸ் தலைவரை கொல்லத் திட்டம் போட்டு முயன்றது இந்தக் கும்பல்! அந்தளவுக்குக் கொடூரக் கும்பலின் தலைவரை தான் இப்போது மெக்சிகோ காலி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications