பாகிஸ்தானில் கால்வைத்த ஜெய்சங்கர்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றது எப்படி தெரியுமா? டின்னர் ஸ்பெஷல்
இஸ்லாமாபாத்: 9 ஆண்டுகள் கழித்து நம் நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல் முதலாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க சென்றுள்ளார். இந்நிலையில் தான் பாகிஸ்தான் சென்ற ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்பு வழங்கியது எப்படி? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு நாடுகளும் பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. அப்படியான ஒரு கூட்டமைப்பு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. சுருக்கமாக எஸ்சிஓ என்று அழைப்பார்கள்.

இந்த கூட்டமைப்பு என்பது யுரேசியன் அரசியல் (ஐரோப்பியா மற்றும் ஆசியா சார்ந்த அரசியல்), பொருளாதாரம், சர்வதேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகள் பற்றி ஆலோசிக்கும் அமைப்பாக உள்ளது.
இந்த எஸ்சிஓ கூட்டமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. அதன்படி பெலாரஸ், சீனா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எஸ்இஓ அமைப்புக்கு ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும்.
அந்த வகையில் 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ உச்சிமாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாடு நேற்று தொடங்கி இன்று 2வது நாளாக நடந்து வருகிறது.
இந்த உச்சி மாநாட்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சி மாநாட்டில் நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி சார்பில் நம் நாட்டின் பிரதிநிதியாக ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
நேற்றைய தினம் ஜெய்சங்கர் விமானத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள விமான நிலையத்தில் இறங்கினார். ஜெய்சங்கரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை இக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இலியாஸ் மெகமூத் நிஜாமி வரவேற்றார். மேலும், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் பாரம்பரிய உடை அணிந்து ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பிறகு ஜெய்சங்கருக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் டின்னர் விருந்து கொடுத்தார். இதில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கரை பார்த்ததும் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். இந்த டின்னர் விருந்தில் பிற நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அதன்பிறகு இன்று 2வது நாளாக எஸ்சிஓ 2வது நாள் மாநாடு என்பது நடந்து வருகிறது. இதில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கரை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். அப்போது சில வினாடிகள் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்தியா -பாகிஸ்தான் இடையேயான உறவு என்பது சுமூகமாக இல்லாத நிலை உள்ளது. இதற்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த 2015ம் ஆண்டில் பாகிஸ்தான் சென்றார். அதன்பிறகு 2016ல் சார்க் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதன்பிறகு கடந்த 9 ஆண்டுகள் கழித்து தற்போது ஜெய்சங்கர் எஸ்இஓ உச்சி மாநாட்டில் பாகிஸ்தானில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications