சீனாவின் உற்ற நண்பன்.. அமெரிக்காவின் சிம்ம சொப்பனம்.. ஈரான் அதிபர் மறைவால் "டிராகனுக்கு" ஷாக்!
பெய்ஜிங்: ஈரான் அதிபர் ரைசி மறைவு ஈரான் நாட்டிற்கு எவ்வளவு அதிர்ச்சியை கொடுக்குமோ அதே அளவு அதிர்ச்சியை சீனாவிற்கும் கொடுத்துள்ளது.
சீனா - ஈரான் இரண்டும் நெருங்கிய நட்பு நாடுகள். முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல போர்களில் ஈரானுக்கு நெருக்கமாக சீனா இருந்துள்ளது. இப்போது ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஈரான் நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது சீனாவிலும் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தலாம். சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது, சீன அதிகாரிகள் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும், ரைசி மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த மற்றவர்களின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தது.
ஈரானுக்கு தேவையான எந்த உதவியையும் வழங்குவதாகவும் சீனா உறுதியளித்து உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, ரைசியின் நிலையும் ஈரானுடன் உள்ள உறவும் மிக முக்கியமானவை. சீனா ஈரானை ஒரு மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கியமான நட்பு நாடாகவும், நேரடி கூட்டாகவும் பார்க்கிறது.

உதாரணமாக மறைந்த ஈரான் அதிபர் ரைசி கடந்த பிப்ரவரி 2023 இல் பெய்ஜிங்கிற்கு சென்று ஆலோசனைகளை செய்தார். மேலும் அவர் பதவியில் இருந்ததிலிருந்து, அவர் ஈரானை சீனாவுக்கு நெருக்கமாக மாற்றினார்.
சீனாவின் செல்வாக்கை ஈரானில் அதிகப்படுத்த ரைசி முக்கியமான காரணமாக இருந்தார். ரைசி ஈரான் - சீனா இடையிலான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
சீனா ப்ரோக்கர்: உதாரணமாக பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. இதற்கும் கூட சீனாதான் காரணம்.
சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
( ஈரான் அதிபர் ஹெலிகாப்டரில் அப்படி எங்கே சென்றார்? நாட்டு எல்லையில் இருந்தது என்ன? ஷாக் தகவல் )
இரண்டு நாட்டு மோதல்: இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்தது. இரண்டு நாடுகளும் முதல்முறையாக மற்ற நாட்டில் தூதரகம் அமைக்க ஏற்றுக்கொண்டன. அதேபோல் தொலைபேசி உறவை மேற்கொள்ளவும் ஏற்றுக்கொண்டன. சீனாவின் சமாதான பேச்சே இதற்கு காரணம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அதிபர் ரைசி மறைவு ஈரான் நாட்டிற்கு எவ்வளவு அதிர்ச்சியை கொடுத்து இருக்குமோ அதே அளவு அதிர்ச்சியை சீனாவிற்கும் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications