ஹைவேஸை போன்றே 'ஐ-வேஸை'யும் மேம்படுத்துவது முக்கியம்: மோடி
சிலிக்கான்வேலி: அமெரிக்காவில் நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தொழில்நுட்பம், இன்டர்நெட், இணையதளம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவன சிஇஓக்கள் கலந்து கொண்ட டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்.

கலிபோர்னியா
உலகை வடிவமைக்க ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் அது இது தான். கலிபோர்னியாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் சூரிய அஸ்தமனத்தை கடைசியாக பார்க்கும் இடங்களில் கலிபோர்னியாவும் ஒன்று. ஆனால் இங்கு தான் புதிய ஐடியாக்களின் முதல் வெளிச்சம் ஏற்படுகிறது.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் அதிக மக்கள் தொகை உள்ள மூன்றாவது நாடு அது தான். தற்போது ஒருவர் விழித்திருக்கிறாரா அல்லது தூங்குகிறாரா என்பது முக்கியம் அல்ல. அவர் ஆன்லைனில் இருக்கிறாரா அல்லது ஆப்லைனில் உள்ளாரா என்பது தான் முக்கியம்.

இந்தியா
ஆப்பிரிக்காவில் மக்கள் செல்போனில் பணப் பரிவர்த்தனை செய்ய தொழில்நுட்பம் உதவுகிறது. இந்தியாவில் மலை உச்சியில் உள்ள குக்கிராமத்தில் இருக்கும் தாய் தனது பச்சிளம் குழந்தையை காக்க உதவுகிறது. ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைக்கு சிறந்த கல்வி கிடைக்கிறது. விவசாயி தனது நிலத்திற்குரிய சரியான விலையை தெரிந்து கொள்கிறார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இளம் நபர் இந்தியாவில் உள்ள உடல் நலம் சரியில்லாத தனது பாட்டியுடன் ஸ்கைப் மூலம் தினமும் பேசுகிறார். இது எல்லாம் உங்களின் பணியால் தான் சாத்தியம் ஆனது.

குஜராத்
நான் குஜராத்தில் பால் குளிரூட்டும் தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்தேன். அந்த விழாவுக்கு வந்த படிக்காத பழங்குடியின பெண்கள் செல்போனில் போட்டோ எடுத்தனர். அதை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, வீட்டிற்கு சென்று போட்டோவை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து பிரிண்ட்அவுட் எடுப்போம் என்று கூறி என்னை வியக்க வைத்தனர்.

விவசாயிகள்
மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் விவசாய முறைகளை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்ஆப்பில் குரூப் துவங்கியுள்ளனர். டிஜிட்டல் யுகத்தில் மக்களின் வாழ்க்கையை அருமையாக மாற்றி அமைக்கலாம்.

மக்கள்
இந்திய குடிமக்கள் அனைவரும் டிஜிட்டல் மூலம் இணைந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்பாடு 63 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பிராந்திய மொழிகள்
22 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ள இந்தியாவில் மாநில மொழிகளில் இணையம் வர வேண்டும். மாநில மொழிகளில் வந்தால் அது மக்களை விரைந்து சென்றடையும்.

செல்போன்
அரசாங்கம் திறமையாக சிறப்பானதாக செயல்பட இ-ஆளுமை திட்டம் தான் முக்கியமானது என்று தான் முன்பு தெரிவித்திருந்தேன். தற்போது எம்-ஆளுமை அல்லது மொபைல் ஆளுமை பற்றி பேசுகிறேன். இந்தியாவில் 1 பில்லியன் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எம்.-ஆளுமை மூலம் மக்களை எளிதில் அடைய முடியும்.

ஐ-வேஸ்
நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் அளிக்க தேசிய ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க்கை விஸ்தரித்து வருகிறோம். அனைத்து பள்ளி, கல்லூரிகளை பிராட்பேண்ட் மூலம் இணைப்போம். ஹைவேஸ் போன்று ஐ-வேஸை(I-ways) மேம்படுத்துவதும் முக்கியம் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications