நீதான் தைரியமான ஆளாச்சே.. ஈரான் வந்து பாரு! டிரம்புக்கு ’சுப்ரீம் லீடர்’ சவால்! உற்றுநோக்கும் உலகம்!
டெஹ்ரான்: நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறி ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு நிலைமை மிக மோசமாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போராட்டம் தொடர்பாக கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடும் பதிலடி கொடுத்துள்ளார். அவ்வளவு திறமை இருந்தால், ஈரானை டிரம்ப் தான் வழிநடத்தட்டும்"என்று கமேனி கூறியுள்ள கருத்து, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழலில், மக்களிடையே கோபமும், அதிருப்தியும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இருந்து பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

ஈரான் போராட்டங்கள்
இந்த போராட்டங்கள் வெறும் பொருளாதார கோரிக்கைகளுடன் மட்டுமல்லாமல், அரசியல் மாற்றத்தையும் கோரும் வகையில் விரிவடைந்துள்ளன. குறிப்பாக, 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, மதகுருக்கள் தலைமையிலான ஆட்சி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த மரபே மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், இப்போது போராட்டங்களில் வெளிப்படையாக முன்வைக்கப்படுகிறது. ஈரானின் 31 மாகாணங்களில், 22 மாகாணங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா
போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, ஈரான் அரசு இணைய சேவைகளை துண்டித்து, தகவல் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இது மக்கள் குரலை அடக்கும் முயற்சி என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதாகவும், உண்மையை மறைக்கும் முயற்சி நடப்பதாகவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஈரான்
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று அறிவித்தார். மேலும், போராட்டக்காரர்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா களமிறங்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்துகள் ஈரான் அரசை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளன.
அயதுல்லா அலி கமேனி
இதற்குப் பதிலடியாக, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஈரான் அரசு எதை செய்தாலும், போராட்டக்காரர்களுடன் சேர்ந்து கொள்வேன் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் நினைக்கிறார். அவ்வளவு திறமையானவராக இருந்தால், அவர் தான் ஈரானை வழிநடத்தட்டும்" என்று கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா
இந்த கருத்துப் போர், ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஈரானின் உள்நாட்டு பிரச்சனையில் அமெரிக்கா தலையிடுவதாக கமேனி தரப்பு குற்றம் சாட்டும் நிலையில், அடுத்த கட்டமாக இந்த விவகாரம் எந்த திசையில் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஈராக்கை போல், ஈரானை அமெரிக்கா அவ்வளவு எளிதாக கைவைக்காது என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications