இந்தியாவுக்கு இப்படியொரு லாபமா! ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால்.. உண்மையில் யாருக்கு நன்மை?
டெல் அவிவ்: ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் போர் முடிவுக்கு வருவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தால் அது உலக பொருளாதாரத்திற்கு மட்டுமில்லை இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய நன்மையைக் கொடுக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்த போதிலும் அது முழு போராக வெடிக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், திடீரென உக்ரைன் மீது ஆரம்பிக்க ரஷ்யா அதிபர் புதின் 2022ல் உத்தரவிட்டார்.

தொடரும் போர்!
அந்த போர் இப்போது 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இது பொருளாதார இழப்பையும் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது. அந்த பாதிப்புகள் சர்வதேச அளவிலும் எதிரொலிக்கிறது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் நேற்றைய தினம் தான் ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தொலைப்பேசியில் பேசியிருந்தார். அப்போது போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் தயாராக இருப்பதாக புதினிடம் டிரம்ப் தெரிவித்தார். அதேநேரம் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு பாசிட்டிவான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.
முடிவுக்கு வரும் அறிகுறிகள்
ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக வெளிப்படையாக எதையும் கூறவில்லை என்றாலும் 3 ஆண்டுகளைக் கடந்தும் போர் தொடர்வதால் அதை முடிவுக்குக் கொண்டு வரவே ரஷ்யாவும் விரும்புவதாகத் தெரிகிறது. நீண்ட காலமாகவே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யா ஆலோசித்தே வருகிறது. இந்தச் சூழலில் டிரம்ப்பின் முன்னெடுப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதாரம்
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மோதல் முடிவுக்கு வந்தால் அது சர்வதேச அளவில் பல்வேறு நல்ல விஷயங்களை ஏற்படுத்தும். முதலில் ஐரோப்பாவில் எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் வரும். போர் முடிவுக்கு வந்த பிறகு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் நீக்கினால் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எரிசக்தி போருக்கு முந்தைய நிலையை அடைந்து சீராகும். இது ரஷ்யப் பொருளாதாரத்திற்கு மட்டும் நல்லதில்லை.. ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் எரிசக்தி விலையை குறைக்கும்.
அதேபோல இந்த போரால் கருங்கடலில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்தால் கருங்கடல் வர்த்தகமும் சீராகும். இது உலகின் விநியோக சங்கிலி சீராகப் பெரியளவில் உதவும். மேலும், உக்ரைன், ரஷ்யாவுக்குக் கோதுமை ஏற்றுமதியில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன. போரால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சீராகும்.
இந்தியாவுக்கும் நல்லது
இந்தியாவுக்கும் கூட இந்த போர் நிறுத்தத்தால் பல நன்மைகள் உள்ளன. முதலில் சூரியகாந்தி எண்ணெய், உரம் உள்ளிட்டவை பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்கிறோம். குறிப்பாகப் போரால் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சில தானிய வகைகளை நாம் உக்ரைனில் இருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தால் சூரியகாந்தி எண்ணெய், உரம் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு இருக்கிறது.
போரினால் பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவையும் கூட போர் நிறுத்தம் அமலுக்கு வந்த உடன் சீராகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத் துறை
முக்கியமாகப் போர் நிறுத்தம் அமலுக்கு வருவது இந்திய பாதுகாப்புத் துறைக்கும் நல்லது. நாம் நமது ராணுவ உபகரணங்களில் 25% ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறோம். குறிப்பாக எஸ்400, டி 90எஸ் உள்ளிட்டவை ரஷ்யாவில் இருந்தே வாங்குகிறோம். போர் ஆரம்பித்த பிறகு எஸ்400 பெறுவது தடைப்படவில்லை என்ற போதிலும் போரினாலும் அது ஏற்படுத்திய பாதிப்பாலும் எஸ்400 டெலிவரி தாமதம் ஆனது. போர் முடிவுக்கு வந்தால் அந்த பிரச்சினையும் தீரும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications