பெரிய நிம்மதி.. தோஷகானா வழக்கில் கிடைச்சாச்சு ஜாமீன்.. இம்ரான் கான் அடுத்த பிளான் என்ன!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பெரிய நிம்மதியாக, கீழமை நீதிமன்றம் அவருக்கு வழங்கிய தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கடந்த 2018 தேர்தலில் களத்தில் இறங்கினார். அதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த இம்ரான் கான் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தார்.

இருப்பினும், கடந்தாண்டில் கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் திரும்ப அவர் ஆட்சியை இழந்தார். அதைத் தொடர்ந்து அங்கே பொறுப்பேற்ற ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் தொடர்ந்து மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
பல வழக்குகள்: இம்ரான் கானை குறிவைத்து அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இம்ரான் கானுக்கு எதிராகப் பல வழக்குகள் இருக்கும் நிலையில், அதன் வழக்கு விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்படி தான் தோஷகானா வழக்கில் அவர் மீதான வழக்கு தீவிரமடைந்தது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.
இம்ரான் கான் சிறைக்கு சென்ற மறுநொடி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்த ஷெரீப் அரசு, தேர்தலை எதிர்கொள்ள ரெடியானது. இம்ரான் கான் ஜெயலில் இருக்கும் போதே தேர்தலை நடத்தி விட்டால் பிரச்சினை இருக்காது என்பதால் அவர்கள் இந்தத் திட்டத்தைப் போட்டனர். அதேநேரம் மறுபுறம் இம்ரான் கான் தரப்பும் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பல முயற்சிகளை எடுத்தனர்.
மேல்முறையீடு: கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அவர்கள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் மெஹ்மூத் ஜஹாங்கிரி ஆகியோர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது இம்ரான் கான் தரப்புக்கு மிகப் பெரிய நிம்மதி தருவதாக இருக்கும். அவரது சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு என்ன: பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளில் இருப்போர் பொதுவாகவே அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும். இருப்பினும், அந்த பரிசுகள் அந்த தனி நபருக்கு வழங்கப்பட்டவை இல்லை. அந்த நாட்டிற்கான பரிசு. எனவே, அதை இந்த பரிசுகளை அவர்கள் கருவூலத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.. அப்படி பாகிஸ்தானில் இருக்கும் அரசுக் கருவூலத்தின் பெயர் தான் தோஷகானா.
இம்ரான் கான் வெளிநாடுகளில் இருந்த பெற்ற விலை உயர்ந்த அரசு பரிசுகளை இந்த தோஷகானாவிடம் ஒப்படைக்காமல், விற்று லாபம் ஈட்டினார் என்பதே இம்ரான் கான் மீதான புகாராகும். அந்நாட்டின் பல முன்னாள் பிரதமர்கள் மீதும் இந்த புகார் இருந்த போதிலும் இம்ரான் கான் மீது மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சற்றே நிம்மதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications