பெஷாவர் துயரத்தையடுத்து சிம்பிளாக திருமணம் செய்யும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட்டருமான இம்ரான் கானின் இரண்டாவது திருமணம் மிகவும் எளிமையாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட்டருமான இம்ரான் கான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை 1995ம் ஆண்டு திருமணம் செய்தார். 2 குழந்தைகள் பெற்ற பிறகு 2004ம் ஆண்டு இம்ரான், ஜெமீமா விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் கட்சி, அரசியல், போராட்டங்கள் என்று பிசியாக இருக்கும் இம்ரான் பிபிசி பத்திரிக்கையாளரான ரெஹம் கானை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் மிகவும் விமரிசையாக நடக்கும் என்று கூறப்பட்டது. இம்ரான் லாகூரில் நடத்தும் சவ்கத் கானும் புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இந்த திருமணம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஷிரீன் மசாரி கூறுகையில்,
இம்ரானின் திருமணம் மிகவும் எளிமையாக நடக்க உள்ளது. அவரது திருமணம் விமரிசையாக நடக்கும் என்று கூறுவதில் உண்மை இல்லை. பெஷாவர் பள்ளி தாக்குதல் துயர சம்வத்திற்கு பிறகு திருமணத்தை விமரிசையாக நடத்த இம்ரான் விரும்பவில்லை. திருமணம் இனி தான் நடக்க உள்ளது. ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி ட்விட்டரில் வலம் வரும் சான்றிதழ் பொய்யானது.
முதலில் மகன்களிடம் பேசிவிட்ட பிறகு தான் திருமணம் பற்றி இம்ரான் எதுவும் செய்வார் என்றார்.
புதுமாப்பிள்ளை இம்ரானுக்கு அவரது முன்னாள் மனைவி ஜெமீமா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications