வேகமாக நிரம்பும் மருத்துவமனைகள்.. சீனாவில் கொரோனாவால் தவிக்கும் முதியோர்கள்.. அதிகரித்த கேஸ்கள்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இது உலகம் முழுவதையும் புரட்டி போட்டுவிட்டது.
சில நாடுகள் தற்போதுவரைகூட இந்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீளவில்லை. உயிரிழப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார பாதிப்புகள் மறுபுறம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தளர்வு
தற்போது வரை ஏறத்தாழ 65 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 66.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கடுத்து பிரேசில் இருக்கிறது. மூன்றாவதாக இந்தியா இருக்கிறது. ஆனால் உலகில் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் இதுவரை 5 ஆயிரத்து சொச்சம் உயிரிழப்புகள்தான் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், அந்நாடு பின்பற்றிவந்த கறாரான கட்டுப்பாடுகள்தான். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் வாழ பழகுங்கள் என்று சொல்லிவிட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால், சீனா மட்டும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த நிலையில், மக்கள் இதனை எதிர்த்து கடந்த வாரம் போராட்டங்களில் குதித்தனர்.

மருந்துகள்
இதனையடுத்து கட்டுப்பாடுகளை குறைக்க அரசு முன்வந்தது. ஆனால், தற்போது அந்நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதாவது கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு காய்ச்சல் தொடர்பாக வருபவர்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் சுமார் 8,626 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்து விற்று தீர்ந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

கேள்வி
சீனாவில் 90.8% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் உலக இந்த நாட்டில்தான் அளவில் அதிக எண்ணிக்கையில் முதியவர்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி சீனாவில் 16.6 கோடி முதியவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே இதற்கு பயந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் மருந்துகளை வாங்கி சேமிக்க தொடங்கி விட்டனர். அதேபோல மருத்துவமனைகளிலும் அதிக அளவில் கூட்டம் அலை மோதி வருகின்றனர். உயிரை காக்க கடுப்பாடா? அல்லது அத்தியாவசிய பொருளாதாரமா? என்று கேள்விகள் சீனாவில் எழுந்து வருகிறது.

கணிப்பு
இளைய தலைமுறையினர் அவசரப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கட்டுப்பாடுகளை நீக்க கோரியதன் மூலம் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளனர். நாடு முழுவதும் தற்போதுவரை 18,75,371 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை பலமடங்காக உயரும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடுகள் நீடித்ததன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக பொருளாதாரத்தில் சீறிய முன்னேற்றம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications