"இப்படி ஒரு ஓனரா".. ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்த.. சீனா ஹோட்டல் உரிமையாளர்
சீனா: சீனாவில் புத்தாண்டையொட்டி விடுமுறை எடுக்காமல் உழைத்த ஊழியர்களை கெளரவப்படுத்தும் வகையில் லாபத்தில் ரூ. 64 லட்சத்தை போனஸாக ஹோட்டல் உரிமையாளர் அறிவித்துள்ளார். உணவக உரிமையாளரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ளது கிலிச்சுவார் ஹாட்ஸ்பாட் உணவகம். இந்த உணவகத்தின் உரிமையாளர் ஹூவாங் ஹூமிங். பொதுவாகவே மிகவும் தாராள மனம் படைத்தவராம் ஹூவாங் ஹூமிங். தற்போது இவர் தன்னுடைய ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஆம் சீனப் புத்தாண்டை ஒட்டி விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய தனது ஊழியர்களுக்கு லாபத்தில் இருந்து ரூ. 64 லட்சத்தை பகிர்ந்து அளித்துள்ளார்.

12 மணி நேரம் வேலை வாங்கி, ஊழியர்களைப் புழிந்தெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள நிறுவனங்கள் தான் தற்போது எங்கு பார்த்தாலும் உள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு மத்தியில், தனது உணவகத்தில் கிடைத்த லாபத்தில் ஊழியர்களை ஊக்குவித்து லாபத்தைப் பகிர்ந்தளித்துள்ள ஹோட்டல் உரிமையாளருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிக வேலை வாங்கிக்கொண்டு , செய்த வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்காமல் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு மத்தியில் தனக்கு கிடைத்த லாபத்தில் ஊழியர்களுக்கும் பங்கு கொடுத்திருக்கும் சீன நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஹூவாங் ஹூமீங், கிலிச்சுவார் ஹாட்ஸ்பாட் என்ற பெயரில் சீனாவில் எட்டு கிளைகளை நடத்தி வருகிறார். இவரது உணவகங்களில் சீனப் புத்தாண்டு அன்று ஏராளமான மக்கள் வந்ததால் விற்பனை படுஜோராக நடைபெற்றுள்ளது. புத்தாண்டு தினத்தன்று மக்கள் கண்டிப்பாக அதிக அளவில் வருவார்கள் என்பதைப் புரிந்துகொண்ட ஊழியர்கள் அனைவரும் விடுமுறை எடுக்காமல் உணவகத்திற்கு வந்து வேலை பார்த்துள்ளனர்.
இதனால், புத்தாண்டில் மூன்றே நாட்களில் அந்த உணவகங்களில் ரூ. 1.2 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. இதனால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த உணவக உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார். இதையடுத்து, புத்தாண்டையொட்டி கிடைத்த வருமானத்தில் தனது உணவகங்களின் கிளை மேலாளர்களுக்கு ரூ.2.18 லட்சம் வரை போனஸாக கொடுத்துள்ளார்.
மேலாளர்களுக்கு மட்டுமல்ல தன்னுடைய ஊழியர்களுக்கு 84 ஆயிரம் ரூபாயை போனஸாக கொடுத்துள்ளார். குறைந்த ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களுக்கும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரத்து 400 வரை சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி மொத்தமாக தனது உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.64 லட்சத்தை போனஸாக கொடுத்துள்ளார்.
இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ஹூவாங் ஹூமிங் கூறியுள்ளதாவது: எங்களது உணவகத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். புத்தாண்டு நாளையொட்டி எங்களுடைய உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 140 பேர் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு வந்தனர். அதிக அளவில் மக்கள் வந்ததால் நல்ல வருமானம் கிடைத்தது.
இதையடுத்து, விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கமளிக்கவும், உற்சாகம் கொடுக்கவும், புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையிலும் அவர்களுக்கு மரியாதை செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். இந்த செயல் அவர்களுக்கான மரியாதையே தவிர விளம்பர நோக்கத்துக்கானது இல்லை என்று தெரிவித்துள்ளார். சீன உணவக உரிமையாளரின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications